Flash Tamil

தமிழகம் ஆந்திராவில் கருணைக் கொலைக்கு அனுமதி கேட்டவரின் 8 மாத குழந்தை சென்னை மருத்துவமனையில் அனுமதி : ரூ.50 லட்சம் செலவை ஆந்திர அரசு ஏற்கிறது 

சென்னை மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட உள்ள 8 மாத பெண் குழந்தையுடன் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் முகமது ரேலா மற்றும் பெற்றோர் ரமணப்பா, சரஸ்வதி.
கருணைக் கொலைக்கு அனுமதி கேட்ட ஆந்திர ஏழை விவசாயியின் 8 மாதக் குழந்தை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்கான ரூ.50 லட்சம் செலவையும் ஆந்திர மாநில அரசு ஏற்கிறது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் முலகலசெருவு அடுத்த பத்தலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமணப்பா. ஏழை விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது 8 மாத பெண் குழந்தை ஞான சாய். ‘பிலியரி அட்ரீசியா’ என்ற நோயால் பிறவியிலேயே இந்த குழந்தையின் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது. அதாவது, கல்லீரலில் இருந்து பித்தப்பைக்கு செல்லும் குழாய் இருக்காது.

கருணைக் கொலைக்கு மனு

குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள் மாற்று கல்லீரல் பொருத் தினால் குழந்தை உயிர் பிழைக்கும். இதற்கு ரூ.50 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளனர். செய்வது அறியாது தவித்த பெற்றோர், குழந்தையை காப்பாற்ற பல இடங்களில் உதவி கேட்டனர். எங்கும் உதவி கிடைக்காததால் விரக்தியடைந்த அவர்கள், தங்களது குழந்தையை கருணைக் கொலை செய்ய அனுமதி கேட்டு, தம்பலபல்லி நீதிமன்றத்தில் கடந்த 23-ம் தேதி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, கருணைக் கொலைக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இச்செய்தி ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து, குழந்தையின் உயிரைக் காப்பாற்றத் தேவையான அனைத்து மருத்துவச் செலவுகளையும் ஆந்திர மாநில அரசே ஏற்கும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 24-ம் தேதி அறிவித்தார்.

விமானத்தில் சென்னை வந்தனர்

இதையடுத்து, சென்னை மேடவாக்கம் அடுத்த பெரும்பாக் கத்தில் உள்ள குளோபல் மருத்து வமனையில் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது. ஹைதராபாதில் இருந்து விமானத்தில் குழந்தை மற்றும் பெற்றோரை அழைத்துக் கொண்டு ஆந்திர மாநில சுகாதாரத் துறை செயலாளரின் உதவியாளர் பிரசாத் நேற்று சென்னை வந்தார். குளோபல் மருத்துவமனைக்கு அவர்கள் காலை 11.15 மணிக்கு வந்தடைந்தனர். உறவினர்கள் சிலரும் உடன் வந்துள்ளனர். குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தானம் தரும் பெற்றோர்

இதுதொடர்பாக குளோபல் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:

குழந்தைக்கு கல்லீரலைக் கொடுக்க பெற்றோர் இருவரும் முன்வந்துள்ளனர். இருவரும் ஒரே ரத்தப் பிரிவை சேர்ந்தவர்கள் என் பதால், இருவருடைய கல்லீரலும் குழந்தைக்கு பொருந்தும். யாருடைய கல்லீரலைப் பொருத் துவது என்று முடிவு செய்ய வில்லை. குழந்தையின் பாதிக்கப்பட்ட கல்லீரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டு, தாய் அல்லது தந்தையிடம் இருந்து 20 சதவீத கல்லீரல் பகுதியை மட்டும் பெற்று குழந்தைக்கு வைக்கப்படும். இதனால் எந்த ஆபத்தும் இல்லை. குழந்தைக்கு வைக்கப்பட்ட கல்லீரல் 2 வாரங்களில் முழு வளர்ச்சி அடைந்துவிடும். அதேபோல, தானம் கொடுத்தவரின் கல்லீரலும் வளர்ச்சி அடையும். அறுவை சிகிச்சையின்போதே குழந்தையின் கல்லீரல் பித்தப்பை இடையே குழாய் இணைக்கப்படும்.

2 அறுவை சிகிச்சைகள்

அறுவை சிகிச்சைகளை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் முகமது ரேலா, டாக்டர் கோமதி நரசிம்மன் ஆகியோர் கொண்ட குழுவினர் செய்ய உள் ளனர். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை 6 முதல் 7 மணி நேரம் வரை நடைபெறும். தானமாகக் கொடுப்பவரிடம் இருந்து கல்லீரலை எடுப்பது, குழந்தைக்கு அதை பொருத்துவது என 2 அறுவை சிகிச்சைகள் செய்யப் பட உள்ளன. இதற்கு ரூ.50 லட்சம் வரை செலவாகும். மருத்துவச் செலவை ஆந்திர மாநில அரசு ஏற்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

image