Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

இந்தியாவில் மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போன் வெளியீடு: விலை மற்றும் முழு தகவல்கள்

புதுடெல்லி:
மோட்டோரோலா நிறுவனத்தின் 40-வது பிறந்த நாளை முன்னிட்டு அந்நிறுவனம் மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போன்றே புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் இன்று (04.04.17) அறிமுகம் செய்யப்பட்டது.
பல்வேறு பிரத்தியேக மோட்டோ அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் முழுமையான மெட்டல் வடிவமைப்பு மற்றும் 5.0 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அதிவேகமாக இயங்கும் கைரேகை ஸ்கேனர், வாட்டர் ப்ரூஃப் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் ஆக்டாகோர் பிராசஸர் கொண்டுள்ள மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போனில் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதில் வழங்கப்படவுள்ள மெமரி குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பம்சங்களை சக்தியூட்ட மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போனில் 2800 எம்ஏஎச் திறன் கொண்டுள்ள பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனினை அதிவேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நிமிடங்களில் சார்ஜ் செய்து பலமணி நேரம் ஸ்மார்ட்போனினை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மென்பொருள் சார்ந்த தகவல்கள் வழங்கப்படாத நிலையில் இதன் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் மோட்டோ ஜி5 விற்பனை இன்று நள்ளிரவு முதல் துவங்குகிறது. உடனடியாக மோட்டோ ஜி5 வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் தளத்தில் புதிய ஸ்மார்ட்போனினை வாங்கும் போது தேர்வு செய்யப்பட்ட வங்கிகளின் கார்டுகளை கொண்டு வாங்கும் போது கேஷ்பேக் மற்றும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என அமேசான் அறிவித்துள்ளது.
Exit mobile version