உலகக்கோப்பை காலிறுதியில் வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தியது. தோனியின் தலைமையின் கீழ் ஒருநாள் போட்டிகளில் இந்தியா பெறும் 100-வது வெற்றியாகும் இது.
177-வது ஒருநாள் போட்டியில் தோனி இன்று 100-வது வெற்றியை தனது தலைமையின் கீழ் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கேப்டனாக 165 ஒருநாள் போட்டிகளில் ஆஸி.யை வெற்றி பெறச் செய்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஆலன் பார்டர் 107 போட்டிகளில் தன் தலைமையின் கீழ் ஆஸ்திரேலியாவுக்காக வெற்றி பெற்றுத் தந்துள்ளார்.
தற்போது 3-வது இடத்தில் தோனி.
வங்கதேசத்தை வீழ்த்திய பிறகு பரிசளிப்பு விழாவில் தோனி கூறியதாவது:
இது ஒரு அருமையான வெற்றி, நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்ற உண்மையைக்கூற கூச்சம் தேவையில்லை என்றே கருதுகிறேன். ஆனால் ஒரு மாதம் முன்பு சற்றே போராடினோம் என்றே கூற வேண்டும்.
வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்குமே இந்த வெற்றிகள் உரித்தானது. நம் அணியிலிருந்து அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் அதிக வீரர்கள் இல்லை ஆனாலும் பேட்டிங்கில் சிறப்பாக ஆடியுள்ளோம்.
பந்துவீச்சில்தான் முன்னேற்றம் ஏற்படவேண்டும் என்று விரும்பினோம். நியூசிலாந்திலும் தென் ஆப்பிரிக்காவிலும் இந்த இடத்தில்தான் திணறினோம். ஆனால் இப்போது நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதற்கு குறிப்பிட்டு எந்த காரணத்தையும் கூற முடியவில்லை. ஃபார்மில் இல்லாத பேட்ஸ்மென் ஃபார்முக்கு வருவது போல்தான் இதுவும்.
கிரிகெட்டில் நிறைய விஷயங்கள் சூட்சுமமானவை. நிறைய சிறிய சிறிய விஷயங்களை சரி செய்தோம் என்று மட்டும் கூறலாம். தீவிரத்தையும், நம்பிக்கையையும் விதைத்தோம். அனைத்தும் சாதகமாக திரும்பின.” என்றார்.
டைவ் அடித்து கேட்ச் பிடித்தது பற்றி சஞ்சய் மஞ்சுரேக்கர் கேட்டதற்கு பதில் கூறிய தோனி, “அது ஒரு எதேச்சைதான். ஆனால் அது முக்கியமான கேட்ச். அப்போது ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பந்து என்னை விட்டு விலகிச் சென்றது டைவ் அடித்தேன், பந்து வந்து ஒட்டிக் கொண்டது” என்றார்.
எஸ்.எம்.எஸ். மூலம் ரசிகர் ஒருவர் இந்த உலகக்கோப்பையில் அதிக அணிகள் 300 ரன்களுக்கும் மேல் அடிப்பது பற்றி கேட்டிருந்தார், அதற்கு பதில் அளித்த தோனி, “5-வது பீல்டர் 30 அடி வட்டத்துக்குள் இருப்பதுதான் காரணம். டி20 கிரிக்கெட்டின் தாக்கம், மேலும் அணிகள் கடைசியில் அடிப்பதற்காக விக்கெட்டுகளை கைவசம் வைத்துள்ளனர். விக்கெட் வறட்சியாக இருந்தால் ரிவர்ஸ் ஸ்விங் எடுக்கும், ஆனால் மட்டை விக்கெட்டுகளில் 300 ரன்களை அணிகள் எட்டவே செய்யும்.” என்றார்.