பெட்ரோல் விலை லிட்டருக்கு 85 காசும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40-ம் குறைந்தது. இந்த விலை குறைப்பு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
நிர்ணய அதிகாரம்
பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற அம்சங்கள் அடிப்படையில், 15 நாட்களுக்கு ஒரு தடவை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
கடந்த 2-ந் தேதி, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.
விலை குறைப்பு
இந்நிலையில், இம்மாதத்தில் இரண்டாவது முறையாக, நேற்று பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன.
பெட்ரோல் விலை (உள்ளூர் வரிகளை கணக்கிடாமல்) லிட்டருக்கு 80 காசு குறைக்கப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 30 காசு குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
விலை குறைப்புக்கு ஏற்ப உள்ளூர் வரிகளும் குறைந்ததால், ஒவ்வொரு பெருநகரத்திலும் விலை நிலவரத்தில் வேறுபாடு காணப்பட்டது.
பெட்ரோல்
சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.62.75 ஆக இருந்தது. இது, 85 காசு குறைந்து, ரூ.61.90 ஆனது. டெல்லியில் பெட்ரோல் விலை 80 காசு குறைந்து, ரூ.59.20 ஆனது. கொல்கத்தாவில், 67 காசு குறைந்து, ரூ.66.81 ஆனது. மும்பையில், 84 காசு குறைந்து, ரூ.61.69 ஆனது.
டீசல்
டீசலை பொறுத்தவரை, சென்னையில் ஒரு லிட்டர் ரூ.51.61 ஆக இருந்தது. இது, ரூ.1.40 விலை குறைந்து, ரூ.50.21 ஆனது. டெல்லியில், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.1.30 குறைந்து, ரூ.47.20 ஆனது.
கொல்கத்தாவில், ரூ.1.15 விலை குறைந்து, ரூ.52.08 ஆனது. மும்பையில், ரூ.1.43 விலை குறைந்து, ரூ.54.26 ஆனது.
காரணம் என்ன?
விலைகுறைப்பு குறித்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்திய எண்ணெய் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த முறை விலை குறைக்கப்பட்ட பிறகு, சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. இதனால் ஏற்பட்ட பலனை நுகர்வோருக்கு அளிப்பதற்காக, இந்த விலை குறைப்பு அமல்படுத்தப்படுகிறது‘ என்று கூறப்பட்டுள்ளது.