பெங்களூரு:
வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை உயர்வு, பெட்ரோல்-டீசலுக்கான வாட் வரி உயர்வு போன்ற லாரி உரிமையாளர்களை பாதிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நடவடிக்கைகளை கண்டித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம், கடந்த மாதம் 30-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திராவில் மட்டும் லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் லாரி ஸ்டிரைக் தீவிரமடைந்துள்ளது.
இதனால் லாரி டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். லாரி தொழிலை நம்பி உள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சரக்கு புக்கிங் ஏஜெண்டுகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கர்நாடகாவில் லாரி ஸ்டிரைக்கால் விவசாயிகள், காய்கறி மற்றும் விளைபொருட்களை மார்க்கெட்டுக்கு அனுப்ப முடியவில்லை. இதனால் கர்நாடக அரசு, கர்நாடக மாநில போக்குவரத்து கழக பஸ்களில் காய்கறிகள் மற்றும் விளைபொருட்களை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கி உள்ளது.
இதனால் குக்கிராமங்களிலிருந்து விவசாயிகள், காய்கறி, நெல்மூட்டை மற்றும் விளைபொருட்களை அரசு பஸ்களில் ஏற்றி வந்து சந்தைகளில் விற்றுச் செல்கிறார்கள்.
விவசாயிகள் வசதிக்காக அரசு பஸ்களில் சில இருக்கைகளை அகற்றி விட்டு அந்த இடத்தில் பொருட்களை ஏற்ற அரசு பஸ் கண்டக்டர்கள் அனுமதி அளித்துள்ளனர்.