மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகமான மக்கள்தொகை கொண்ட லுசான் என்ற மிகப்பெரிய தீவில் இன்று பிற்பகல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை அடுத்து சுமார் 40 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதால் இங்குள்ள மக்கள் கடும் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
தெற்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டின் வடகோடிப் பகுதியில் அமைந்துள்ள லுசான் தீவு, அந்நாட்டின் மிகப்பெரிய தீவாக கருதப்படுவதால் அந்நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பானவர்கள் இங்குதான் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் 3.09 மணியளவில் இந்த தீவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் மிகப்பெரிய துறைமுக நகரமாக வளர்ந்துவரும் பட்டாங்காஸ் நகரத்தை மையமாக கொண்டு இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
முன்னதாக, நேற்றிரவு இதே பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் அதை தொடர்ந்து சுமார் நாற்பது முறை அடுத்தடுத்து நில அதிர்வுகளும் ஏற்பட்டன.
இந்நிலையில், தலைநகர் மணிலாவிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரம் தெற்கே உள்ள டலாகா என்ற இடத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட நிலநடுக்கம் நாட்டின் தலைநகரான மெட்ரோ மணிலா, லகுனா, ரிஸால், கவிட்டே, ஸம்பேல்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் தங்களது வீடுகளைவிட்டு வீதிக்கு ஓடிவந்து பயந்தபடி நின்றிருக்கும் காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருள் சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியாகவுல்லை என்பது குறிப்பிடத்தக்கது.