கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களை ஊக்குவிக்க சலுகைகளை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
நிதி ஆயோக் உறுப்பினரும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவருமான பிபேக் தேப்ராய் குழு, தற்போதைய பொருளாதர சூழல் குறித்து ஆராய்ந்து அறிக்கையை அளித்துள்ளது. அதில் திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பு உருவாக்கம், மனித வள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இதில் குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. கட்டமைப்புத் துறை வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
15-வது நிதிக் குழுவிடம் கல்வி, சுகாதாரத் துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களை ஊக்குவிப்பதன் மூலம் பிற மாநிலங்களும் இவ்விரு துறைகளில் அதிக கவனம் செலுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியை கண்காணிப்பதற்கான புதிய வழி முறையையும் இது கண்டறிந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி காரணிகள் மற்றும் சமூக முன்னேற்ற அளவீடு, கடைசி குடிமகன் வரை சென்றுள்ள அரசின் திட்ட பயன்களை அறிவதற்கான வழி முறையையும் வகுத்துள்ளது.
கட்டமைப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தேப்ராய் குழு தெரிவித்துள்ளது