கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க, தென்கொரிய கடற்படைகள் இணைந்து நேற்று போர் ஒத்திகையை தொடங்கின.
வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளை அழித்துவிடுவோம் என்றும் அந்த நாடு மிரட்டல் விடுத்து வருகிறது.
இதற்குப் பதிலடியாக வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
இந்தப் பின்னணியில் வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் கொரிய தீபகற்ப கடல் பகுதியில் அமெரிக்க, தென்கொரிய கடற்படைகள் இணைந்து நேற்று பிரம்மாண்ட போர் ஒத்திகையை தொடங்கின. இந்த போர் பயிற்சி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற உள்ளது.
அமெரிக்க கடற்படை சார்பில் யுஎஸ்எஸ் ரொனால்டு ரீகன், தியோடர் ரோஸ்வெல்ட், நிமிட்ஸ் ஆகியவை உட்பட 11 போர் கப்பல்கள் ஒத்திகையில் பங்கேற்றுள்ளன. தென்கொரிய கடற்படை சார்பில் 7 கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே வடகொரிய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகின் அமைதியை அமெரிக்கா சீர்குலைத்து வருகிறது. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத போரை தொடங்க முயற்சித்து வருகிறது. எதையும் எதிர்கொள்ளும் திறன் வடகொரியாவுக்கு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.