World

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிப்போம்: அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் உறுதி

வியட்நாமின் தனாங் நகரில் நேற்று நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் உரையாடிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.   –  AFP

சிரியாவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் அழிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அறிவித்துள்ளனர்.

ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு வியட்நாமின் தனாங் நகரில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பங்கேற்றனர்.

அப்போது இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கினர். அடிக்கடி நட்புடன் உரையாடினர். இந்த மாநாட்டின்போது சிரியா விவகாரம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை வேரறுக்க ரஷ்ய, அமெரிக்க அதிபர்கள் உறுதி மேற்கொண்டனர். சிரியாவில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள ஐ.நா. உறுப்பு நாடுகள் தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என்று இரு தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிரியா பிரச்சினைக்கு ராணுவ ரீதியில் தீர்வு காண முடியாது என்பதை ட்ரம்பும் புதினும் ஒப்புக் கொண்டனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை குறித்து அமெரிக்க தரப்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் வியட்நாம் மாநாட்டில் ட்ரம்பும் புதினும் நட்புடன் பேசியதை அமெரிக்க ஊடகங்கள் வரவேற்றுள்ளன.

இரு தலைவர்களும் கடந்த ஜூலையில் ஜெர்மனியில் நடந்த ஜி20 மாநாட்டில் முதல்முறையாக சந்தித்துப் பேசினர். தற்போது வியட்நாமில் மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளனர். சிரியா, உக்ரைன் விவகாரங்களில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இதன் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடை விதித்துள்ளது.