political

ஆர்.கே.நகர் மக்களுக்கு, டி.டி.வி.தினகரன் கொடுக்கப்போகும் இன்ப அதிர்ச்சி!

தேர்தலுக்குப் பிறகுதான் வாக்குறுதிகளைச் செயல்படுத்துவோம். ஆனால், தேர்தலுக்கு முன்பே ஆர்.கே.நகரில் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறோம் என்று சசிகலா அணியைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் அதிரடியாகக் கூறியுள்ளார்.

வரும் 12-ம் தேதி நடக்க இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், தேர்தல் ஆணையத்தால் நேற்று ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க அம்மா அணி தரப்பினர் டி.டி.வி.தினகரன் தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், ‘அரசியலில் பின்னடைவு கிடையாது, அனுபவம் மட்டும்தான். தி.மு.க, பா.ஜ.க, ஓ.பி.எஸ் அணி, தேர்தல் ஆணையம் கூட்டாகச் செயல்படுகின்றனர்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர், ‘நான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவேன். ஆனால், பா.ஜ.க டெபாசிட் கூட வாங்காது. அதை வைத்துப் பார்க்கும்போது, தேர்தல் திட்டமிட்டு ரத்து செய்யப்பட்டது போல்தான் உள்ளது. பொதுவாக, தேர்தலுக்குப் பிறகுதான் வாக்குறுதிகளைச் செயல்படுத்துவோம். ஆனால், தேர்தலுக்கு முன்பே ஆர்.கே.நகரில் வாக்குறுதிகளை நிறைவேற்றப்போகிறோம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தென்னை மரத்திலே தேள் கொட்டினால், பனை மரத்திலே நெறி கட்டுவது போல்தான் இந்தக் குற்றச்சாட்டு உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்று எதிர்க்கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து இப்படி இடைத்தேர்தலை முடக்கிவிட்டார்கள். திட்டமிட்டு அவதூறு பரப்பினர். நாங்கள் எந்தப் பணப்பட்டுவாடாவும் செய்யவில்லை’ என்று கூறினார்.

About the author

Julier