சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்ப் புத்தாண்டு மலர்கின்ற சித்திரை முதல் நாளான இந்த இனிய நாளில், என் அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய “தமிழ்ப் புத்தாண்டு” திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்னெடுங்காலமாய் தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடி வந்த நிலையில், அந்த மரபினை மாற்றி, தமிழ்ப் புத்தாண்டை வேறு ஒரு தினத்திற்கு மாற்றிய செயலை திருத்தி, நமது முன்னோர் வகுத்த வழிமுறையின் படியும், தமிழ் மக்களின் விருப்பப்படியும் சித்திரை முதல் நாளை மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும் முறையை நிலைநாட்டியவர் புரட்சித் தலைவி அம்மா என்பதை இத்தருணத்தில் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற்ற ஒரு முதன்மை மாநிலமாக உருவாக்குவதே என்னுடைய கனவாகும்’ என்றுரைத்த அம்மாவின் கனவினை நனவாக்கிட, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் அயராது உழைத்து, அவர் வகுத்துத் தந்த வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து தமிழகத்தை கொண்டு செல்ல இந்த இனிய நாளில் உறுதியேற்போம்.
இத்தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் தம் வாழ்வில் புதிய வளர்ச்சியையும் புதிய மலர்ச்சியையும் புதிய வெற்றிகளையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த சித்திரை தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மலையாள புத்தாண்டான விஷு திருநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-
மலையாள புத்தாண்டு தினமான “விஷு” திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேரளத்தின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான “விஷு” திருநாளன்று மலையாள மக்கள், அதிகாலையில் கண் விழித்தவுடன் முதலில் விஷுக் கனியை கண்டு, மலரும் இப்புத்தாண்டு தம் வாழ்வில் எல்லா நன்மைகளையும் நல்கிடும் ஆண்டாக மலர வேண்டும் என்று கடவுளை வழிபட்டு, “விஷு கைநீட்டம்” வாயிலாக வீட்டிலுள்ள பெரியோரிடம் ஆசியும், அன்புப்பரிசாக பணமும் பெற்று, குடும்பத்தினருடன் விருந்துண்டு விஷு பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்தப் புத்தாண்டு, மலையாள மக்கள் வாழ்வில் எல்லா நலங்களையும், வளங்களையும் வழங்கிடும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை எனது “விஷு” திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.