அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவது குறித்த பேச்சுவார்த்தை தொடங்க இருக்கிறது. ‘முதல்வர் பதவி குறித்த விவகாரத்தில் பிரதமர் தலையிடவில்லை. ‘எடப்பாடி பழனிசாமி தரப்பு நம்மை நோக்கி வரும்’ என்று எதிர்பார்த்தார் பன்னீர்செல்வம். எந்தவித சிக்கலும் இல்லாததால், முதல்வர் பதவியை விட்டுத் தரும் முடிவில் எடப்பாடி பழனிசாமி இல்லை’ என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.
அ.தி.மு.கவில் இருந்து நான் ஒதுங்கிவிட்டேன்’ என டி.டி.வி.தினகரன் அறிவித்த நேரத்திலேயே, அணிகள் இணைப்பு குறித்த தடைகள் முற்றிலும் நீங்கிவிட்டன. ‘சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும்’ என்ற நிபந்தனையில் மட்டுமே மன்னார்குடி ஆதரவு எம்.எல்.ஏக்கள் சற்று காலதாமதம் செய்தனர். நேற்று முன்தினம் வரையில், ‘எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டுவேன்’ எனப் பேசி வந்த தினகரன், திடீரென மனம் மாறியிருப்பதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் பன்னீர்செல்வம் தரப்பினர். “ஆட்சி மற்றும் கட்சியில் கூடுதல் முக்கியத்துவத்தை எதிர்பார்த்து காய் நகர்த்தி வந்தார் பன்னீர்செல்வம். அவர் முன்வைத்த நிபந்தனைகளில், ‘ஜெயலலிதா மரணத்துக்கு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்’ என்பது முக்கியமானது. இதனை ஏற்று ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்கவும் எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டார். கூடவே, பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட சிலருக்கு அமைச்சர் என்பதையும் ஏற்றுக் கொண்டனர். அதேநேரம், ‘மீண்டும் முதல்வர் பதவியை எனக்கே வழங்க வேண்டும்’ என பன்னீர்செல்வம் தரப்பினர் கொடுக்கும் அழுத்தத்துக்கு அவர்கள் பதில் சொல்லவில்லை. ‘முதல்வர் பதவியில் சமசரம் இல்லை’ என பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார் தம்பிதுரை. இப்படியொரு அதிரடி திருப்பம் ஏற்படக் காரணமே, திவாகரனின் சில முடிவுகள்தான்” என விவரித்த மன்னார்குடி அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,
“சசிகலாவால் பதவிக்குக் கொண்டு வரப்பட்டவர் பன்னீர்செல்வம். ‘மீண்டும் பதவி இல்லை’ என்பதை அறிந்த உடன், ஜெயலலிதா சமாதியில் அவர் தியானம் இருந்ததை மன்னார்குடி உறவுகள் மறக்கவில்லை. பன்னீர்செல்வம் அளவுக்கு சசிகலா குடும்பத்துடன் எடப்பாடி பழனிசாமிக்கு அவ்வளவு நெருக்கம் இல்லை. அமைச்சரவையில் பிரதான இடம் கிடைத்த பிறகுதான் அவர்களுடன் அவரால் நெருங்க முடிந்தது. ‘தொடக்கத்தில் இருந்து நம்மால் வளர்க்கப்பட்டவர், துரோகம் செய்துவிட்டார்’ என்பதை சசிகலாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே, ‘அணிகள் இணையும்போது மீண்டும் பன்னீர்செல்வம் முதல்வர் பதவிக்கு வந்துவிடக் கூடாது’ என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் கூட்டம் போட்ட நேரத்திலேயே 9 எம்.எல்.ஏக்கள் சசிகலா தரப்பு பக்கம் நின்றனர். இதனால், 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு என்பது 113 ஆக குறைந்தது. பெரும்பான்மை பலம் வேண்டுமென்றால், பன்னீர்செல்வத்திடம் உள்ள 11 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவசியம். ‘எப்படியும் நம்மைத் தேடி வருவார்கள்’ என புன்சிரிப்புடன் காத்திருந்தார் பன்னீர்செல்வம். இதை உணர்ந்த திவாகரன், நேரடியாக எடப்பாடி பழனிசாமிக்குத் தூது அனுப்பினார். ‘ ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர் உள்பட எங்கள் பக்கம் உள்ள 19 எம்.எல்.ஏக்களும் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். தினகரனை ஒதுக்கி வைக்கும் முடிவில் உறுதியாக இருங்கள். ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுத்துவிட்டால், மீண்டும் ஒருமுறை உங்களால் பதவிக்கு வர முடியாது’ என உறுதியாகக் கூற, இதன்பிறகே, குழப்பத்தில் இருந்து விடுபட்டார் எடப்பாடி பழனிசாமி. தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களும் அமைதியாக இருப்பதைக் கண்ட தினகரன், ‘ குடும்பத்தினர் சப்போர்ட் இல்லாவிட்டால், இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்’ என்பதைப் புரிந்து கொண்டு, ‘கட்சிக்கும் ஆட்சிக்குள் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதால், நான் ஒதுங்கியிருக்கிறேன்’ எனப் பேட்டி அளித்தார்” என விவரித்தார்.
“துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு தினகரனைக் கை காட்டிவிட்டுச் சிறைக்குச் சென்றார் சசிகலா. அதேநாளில், எடப்பாடி பழனிசாமியிடம் பேசிய தினகரன், ‘ஆட்சி அதிகாரத்துக்குள் நான் தலையிட மாட்டேன். சுதந்திரமாக செயல்படுங்கள். மக்கள் நலன்தான் முக்கியம்’ எனப் பேசியவர், அடுத்த வந்த நாட்களில் ஆட்சிக்குள் தலையிடத் தொடங்கினார். தனக்கு வலதுகரமாக இருக்கும் தளவாய் சுந்தரம், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களை வைத்துக் கொண்டு ஆட்டத்தைத் தொடங்கினார். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மாற்றம் உள்பட அனைத்து விவகாரங்களிலும் தலையிட்டார். இதனை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ரசிக்கவில்லை. ‘இந்தக் கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது?’ எனத் தெரியாமல் தவித்து வந்தனர். இந்தநேரத்தில், வருமான வரித்துறை ஆட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் தினகரன் சிக்கவும், தங்களுக்கு கிடைத்த நல்லவாய்ப்பாக எடப்பாடி தரப்பு எடுத்துக் கொண்டது. டெல்லி நடவடிக்கைகளை தம்பிதுரை பார்த்துக் கொள்ள, தினகரனுக்கு எதிராக உள்ள அவரது குடும்ப உறவுகளை வைத்தே அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. தற்போது பன்னீர்செல்வம் தரப்பின் ஆதரவு என்பது கூடுதல் பலம்தான். அந்தப் பலம் இல்லாமலேயே ஆட்சி லகானை செலுத்த முடியும் என்பதால், முதல்வர் நாற்காலியை கெட்டியாகக் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார் பழனிசாமி. ‘பேச்சுவார்த்தை முடிவுக்கு வருமா? இழுபறி நீடிக்குமா?’ என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்” என்கிறார் கொங்கு மண்டல அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.
‘சசிகலா அல்லாத அ.தி.மு.க’ குறித்து நேற்று அ.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் பேசிய திவாகரன் தரப்பினர், ” நம்மை விட்டு அதிகாரம் எங்கே போய்விடப் போகிறது? தினகரனையும் அவரது குடும்பத்தையும்தான் ஒதுக்கியிருக்கிறார்கள். ஜெயலலிதாவால் மீண்டும் கட்சிக்குள் சேர்க்கப்பட்ட சசிகலாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தினகரன் கையில் அதிகாரம் இருப்பதைவிடவும், எடப்பாடி பழனிசாமி கையில் இருப்பதே நல்லது. இதைத்தான் தொடக்கத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம். இனி அ.தி.மு.கவை வழிநடத்தப் போவது குழுதான். ஓரிருநாளில் நாங்கள் பிரதமரையே சந்தித்தாலும் ஆச்சரியமில்லை” என்கின்றனர்.