political

தரகர் சுகேசுடன் பேசியதை டி.டி.வி.தினகரன் ஒத்துக்கொண்டார்: ஐகோர்ட்டு நீதிபதி என்று நினைத்து பேசினாராம்

அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது.

இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக இரு அணியினரும் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் அவர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக சுகேசுக்கு ரூ.10 கோடியை தினகரன் கொடுத்ததாக தகவல் வெளியானது.

டெல்லியில் கைதான சுகேசிடம் இருந்து ரூ.1.3 கோடி கைப்பற்றப்பட்டது. மீதம் ரூ.8.7 கோடியை போலீசார் தேடி வருகிறார்கள். இது தொடர்பாக சுகேசிடம் அவர்கள் நடத்தி வரும் விசாரணை நாளை முடிய உள்ளது.

இந்த நிலையில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்த விசாரணைக்கு வருமாறு டெல்லி போலீசார் சென்னை வந்து சம்மன் கொடுத்தனர்.

அதை ஏற்று டி.டி.வி. தினகரன் கடந்த சனிக்கிழமை டெல்லி சென்றார். சாணக்கியாபுரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் போலீஸ் முன்பு அவர் ஆஜரானார்.

இந்த 17 மணி நேர விசாரணையில் டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு திருப்தி தரும் வகையில் பதில்கள் கிடைத்துள்ளன. நிறைய கேள்விகளுக்கு டி.டி.வி.தினகரனிடம் இருந்து அவர்களால் உரிய பதில் பெற முடிந்தது.

இந்த விசாரணைகளின் போது தினகரனின் வாட்ஸ்-அப் மற்றும் எஸ்.எம்.எஸ். தகவல் பரிமாற்றங்களையும் டெல்லி போலீசார் காண்பித்து கேள்விகள் கேட்டனர்.

இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் பிடிபட்டது பற்றி தொலைக்காட்சிகளில் பரபரப்பாக செய்திகள் வெளியான போது, சுகேஷ் என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. அவரை நான் பார்த்ததே இல்லை என டி.டி.வி.தினகரன் கூறினார். விசாரணைக்கு புறப்பட்டு சென்ற போதும் அவர் அதையே கூறினார்.

டெல்லி போலீசாரிடமும் முதலில் தினகரன் அந்த பதிலையே தெரிவித்தார். ஆனால் தொலைபேசியில் பேசியதை போலீசார் போட்டுக்காட்டியதும் வேறு வழியின்றி தரகர் சுகேசுடன் பேசியதை டி.டி.வி.தினகரன் ஒத்துக்கொண்டார்.

சுகேஷ் சந்திரசேகரை அவர் ஐகோர்ட்டு நீதிபதி என்று நினைத்தாராம். அதனால்தான் போனில் பேசியதாக தினகரன் போலீசாரிடம் தெரிவித்தார்

தினகரனிடம் நடந்த இந்த விசாரணை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் அந்த விசாரணை முடியவில்லை.

இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) மூன்றாவது நாளாக டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.