ஓ.பி.எஸ். அணியினர் பேட்டி அளித்த சில நிமிடங்களில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அம்மாவின் ஆத்மா அ.தி.மு.க.வை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. அந்த எண்ணத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். இந்த பிரச்சினையையும் பேசி தீர்க்க முடியும். எனவே அவர்களை பேச்சுவார்த்தைக்கு உங்கள் மூலம் அழைப்பு விடுக்கிறேன்.
ஓ.பி.எஸ். அணியினர் இன்று மீண்டும் தங்களது 2 நிபந்தனைகள் பற்றி பேசி உள்ளனர். துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்குவதாக தெரிவித்து விட்டார்.
எனவே இனியும் அந்த நிபந்தனை பற்றி பேச தேவையில்லை. ஆனால் ஓ.பி.எஸ். அணியினர் அந்த நிபந்தனையை எழுப்பி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். தொடர்ந்து முரண்பாடாக பேசி வருகிறார்கள்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்கிறார்கள். ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோதே அதை செய்து இருக்கலாமே.
தற்போது இது தொடர்பான பொதுநல வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கோர்ட்டு உத்தரவிட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்.
பொதுச்செயலாளர் பதவியை பொறுத்தவரை தேர்தல் கமிஷன் தீர்ப்பு வழங்க உள்ளது. அந்த தீர்ப்பு வந்தபிறகு நாம் கட்சியை வழி நடத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.