political

ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவை தடுக்கும் தைரியம் யாருக்கு உள்ளது?: செந்தில்பாலாஜிக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி

தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணி செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்திற்கு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை வழங்கியுள்ளார். பல்வேறு காரணங்களாலும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாலும் இந்த மருத்து வமனை அமையவில்லை.

அதுசம்பந்தமாக அரவக்குறிச்சி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பல்வேறு கருத்தை தெரிவித்து வருகிறார். அதில் என்னையும், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரைையையும் தொடர்பு படுத்தி திட்டம் அமைவதற்கு நாங்கள் முட்டுக்கட்டை போடுவதாக அபாண்டமான குற்றச்சாட்டை சமத்தியுள்ளார்.

வாங்கல் குப்புச்சிபாளையம் பகுதியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்தால் மக்கள் எளிதில் சென்றுவர இயலாது என்று ஜெயலலிதாவே முடிவு செய்து வேறு இடம் பார்க்குமாறு கூறினார். அதன் பின்னரே காந்தி கிராமத்தில் உள்ள இந்த இடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஜெயலலிதாவிடம் கூறினார்.

அதன்பேரிலேயே வேறு இடம் பார்க்குமாறு ஜெயலலிதாவும் கூறி காந்தி கிராமம் தேர்வு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி தானமாக கொடுக்கும் இடம் பரம்பரை நிலமாக இருக்கவேண்டும். ஆனால் வாங்கல் குப்புச்சி பாளையத்தில் உள்ள இடம் 27-ந்தேதி புதிதாக வாங்கப்பட்டு மறுநாளே தானமாக தரப்பட்டுள்ளது.

இதற்கு அப்படி என்ன அவசியம், அவசரம் ஏற்பட் டது? இது தனி நபரின் லாப நோக்கோடு வழங்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே இடத்தை மாற்ற முடிவு செய்த பின்னர் அதை தடுக்க யாருக்கு தைரியம் உள்ளது? இதில் எனக்கு துளியும் சம்பந்தம் இல்லை.

காந்தி கிராமத்தில் இடம் மாற்றி அடிக்கல் நாட்டிய போது செந்தில்பாலாஜியும் உடன் இருந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அத்துடன் இடம் மாற்றம் தொடர்பான தகவல்கள் ஊடகங்களிலும் வெளியானது.

அதனை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா 7 மாத காலம் பதவியில் இருந்தார். அப்போதே செந்தில்பாலாஜி இந்த போராட்டத்தை அறிவித்து இருந்தால் நானே அவரை பாராட்டியிருப்பேன். காந்தி கிராமத்தில் மருத் துவக்கல்லூரி மருத்துவமனை அமைய அரசாணை இருக்கிறதா என்று செந்தில்பாலாஜி கேட்கிறார். தியாகராஜன் என்பவர் தொடர்ந்து வழக்கில் தடையாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் அரசாணை எப்படி பிறப்பிக்க முடியும்.

கரூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று 4½ ஆண்டுகள் அவர் போக்கு வரத்து துறை அமைச்சராக இருந்துள்ளார். 8 ஆண்டுகள் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். தொகுதி வாக்காளர் என்றும் கூறுகிறார். அவருடைய தண்ணீர்பாளையம் பூத்தில் என்னைவிட எதிர்க்கட்சி வேட்பாளர் 470 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார். ஆனால் செந்தில்பாலாஜி 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆனால் நான் 441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் சூழ்நிலை யாரால் வந்தது? நான் தான் தோன்றிமலை ஒன்றிய செயலாளராக இருந்த போது அதில் உள்ள 22 வாக்குச்சாவடிகளிலும் அ.தி.மு.க.வுக்கு அதிக வாக்குகள் பெற்றுத்தந்தேன். ஆனால் அவருடைய சொந்த பகுதியான தி.மு.க. செல்வாக்கு மிகுந்த பெரியார் நகரில் வாக்குகள் தி.மு.க.வுக்கு சாதகமாகவே அமைந்தன.

ஆனால் அதையடுத்து வந்த தேர்தலில் நான் அ.தி.மு.க.வுக்கு அதிக வாக்குகள் பெற்றுத்தந்தேன். இதற்கு அவர் முதலில் அவர் பதில் கூறட்டும்.

தமிழகத்தில் நாளை அரசு பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.