Science

வியாழன் கிரகத்தில் மனிதன்?

பூமியின் இயற்கை வளங்களை விழுங்கி ஏப்பம் விட்ட மனிதனின் பார்வை இப்போது  பூமியைச் சுற்றி இருக்கும் கிரகங்களின் மீது திரும்பி இருக்கிறது. உலகில் பூமியைப் போலவே வாழத் தகுதியான கிரகங்கள் ஏதாவது இருக்கிறதா எனத் தன் அறிவியல் மூளையால் ஆராயத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன.

அதில் குறிப்பிடத்தக்க இலக்குகளை அடையவும் தவறவில்லை. தற்போது சனி மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களைச் சுற்றும் குளிர்ச்சியான சந்திரன்களில் மனிதன் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.

ரோமானியக் கடவுளான ஜூபிடரின் பெயரால் அழைக்கப்படும் வியாழன் கிரகம், சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய கிரகமாகும். வியாழன், சூரியனிலிருந்து ஐந்தாவதாக உள்ளது. இது 88,736 – மைல் அதாவது 1,42,800 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. வியாழனின் சுற்றளவு பூமியைப் போல 11 மடங்கு அதிகம். வியாழன் கிரகத்திற்கு உள்ள நிலவுகளில் இதுவரை 28 கண்டறியப்பட்டுள்ளன. 1610ம் ஆண்டில் நான்கு நிலவுகளை கலிலியோ கண்டுபிடித்தார்.

வியாழன் கிரகம் முழுவதும் வாயுக்களால் நிரம்பி உள்ளது. இந்த வாயுக்களின் பிரதிபலிப்பால் சூரியன், நிலா, வெள்ளி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இது பிரகாசமாகத் தெரிகிறது. இந்த அதிகப்படியான வாயுக்களால் இந்த கிரகத்தில் கடுமையான அழுத்த  நிலை காணப்படுகிறது. ஆனால் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற கனமற்ற வாயுக்கள் நிரம்பியிருப்பதால் பூமியை விட வியாழன் அடர்த்தி குறைவானதாக உள்ளது.

கடந்த 1995ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அனுப்பிய கலிலியோ விண்கலத்தில் இருந்து சென்ற ஆய்வுக்கலம், வியாழன் கிரகத்தின் உள்பகுதி படங்களை எடுத்து அனுப்பியது. வியாழன் கிரகத்தில் நிலவும் கடுமையான அழுத்தத்தால் நசுக்கப்பட்ட ஆய்வுக் கலத்தால் அங்கு ஒரு மணி நேரமே தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆனால் அதற்குள் அக்கலம் பல முக்கியமான தகவல்களை பூமிக்கு அனுப்பிவிட்டது.

பூமியின் புவியீர்ப்பு விசையைக் காட்டிலும் சந்திரனின் ஈர்ப்புவிசை ஆறு மடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை இருப்பதால்தான் அந்த விசை காற்று மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது. அத்தகைய விசை சந்திரனுக்கு இல்லாததால் அங்கே காற்று இல்லை. சந்திரனோடு ஒப்பிடும்போது செவ்வாயின் ஈர்ப்பு விசை கொஞ்சம் பரவாயில்லை. பூமியின் ஈர்ப்பு விசையில் பாதியளவு உள்ளது. இதன் காரணமாக அங்கே கொஞ்சம் காற்று உள்ளது. ஆகவேதான் அங்கு உயிர்கள் வாழ வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம். இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டேயிருக்கின்றன. வால் நட்சத்திரங்களும் அடிக்கடி வந்து மோதுவது உண்டு. இந்த அபாயகரமான ஈர்ப்பு விசையால் வியாழனில் மனிதன் உயிர் வாழ இயலாது என்கிற கருத்தும் நிலவுகிறது.

ஆனால் வியாழனின் நிலவுகளில் இத்தகைய அபாயம் இல்லை என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இதேபோல சனி கிரகத்திலும் ஒரு நிலவை ‘வாழத் தகுந்த சூழல் இருக்கும் இடம்’ எனக் கருதுகிறார்கள். சனியின் மிகப் பெரிய நிலவான ‘டைடான்’ அது! வியாழனின் நிலவுகளில் கடல் போன்ற சூழல் உள்ள யுரோபா, கனிமெட், மற்றும் கலிஸ்டோ ஆகியவையே அவை!

ஐரோப்பிய விண்வெளிக் கழகம்,  ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த நான்கு நிலவுகளையும் ஆராய்ச்சி செய்ய உள்ளது. வியாழனின் பனிக்கட்டி நிலவுகள் ஆராய்ச்சி எனும் பொருள்படும்விதமாக இதற்கு ‘ஜூஸ்’ (Juice – Jupiter Icy Moons Explorer) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வரும் 2022ம் ஆண்டு இந்த ஆய்வுக்கான விண்கலம் செல்லும். இது சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு நான்கு நிலவுகளையும் ஆராய்ச்சி செய்யும். விரைவில், ‘சென்னைக்கு மிக அருகில் டைடான் நிலவில் மனைகள் விற்பனைக்கு’ என விளம்பரங்களைப் பார்க்கலாம்!