Sports

அஸ்வின், ஜடேஜாவை சமாளிக்க திட்டம் தயார்: மனம் திறக்கிறார் இலங்கை வீரர் திமுத் கருணாரத்னே

பயிற்சி ஆட்டத்தில் பந்தை நேர்த்தியாக விரட்டும் இலங்கை அணியின் தொடக்க வீரர் திமுத் கருணாரத்னே.   –  படம்: பிடிஐ

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜாவை சமாளிக்க சிறப்பாக தயாராகி உள்ளதாக இலங்கை அணியின் இடது கை தொடக்க வீரரான திமுத் கருணாரத்னே தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 0-3 என சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் ஆனது. இந்தத் தொடரில் இலங்கை தொடக்க வீரரான திமுத் கருணாரத்னே 285 ரன்கள் சேர்த்தார். அதிலும் 2-வது டெஸ்ட்டில் அவர், 141 ரன்கள் விளாசிய போதிலும் அணியின் தோல்வி தவிர்க்க முடியாததாக அமைந்தது. 29 வயதான கருணாரத்னே இந்தத் தொடரில் அஸ்வின் பந்தில் இரு முறையும், ஜடேஜா பந்தில் ஒரு முறையும் விக்கெட்டை பறிகொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்திய மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நேற்று தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் இலங்கை வீரர்கள் சிறப்பாக பேட் செய்தனர். திமுத் கருணாரத்னே அரை சதம் அடித்தார். முதல் நாள் ஆட்டத்துக்கு பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:

ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் விக்கெட் வேட்டையாட காத்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். ஒவ்வொரு முறையும் அவர்கள் அடிப்படையை ஒட்டியவாறே பந்து வீசுவார்கள். நாம் அவர்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை என்றால், அவர்கள் வேறு ஏதாவது செய்ய முயற்சிப்பார்கள். அப்படி களத்தின் நிலைமையை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் கூடுதலாக ஏதாவது செய்ய வேண்டும்.

இதுதான் எனது ஆட்டத்தின் திட்டம். தளர்வான பந்துகளுக்காக காத்திருப்பேன், அவை கிடைக்கும் பட்சத்தில் சரியாக பயன்படுத்திக் கொள்வேன். இந்த திட்டம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் கிரீஸில் இருந்து வெளியே வந்து விளையாடி பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது குறித்து சிந்திப்பேன். இந்தியாவுக்கு எதிராக கொழும்பு டெஸ்ட்டில் அடித்த சதம் (141 ரன்கள்) தான் பாகிஸ்தான் தொடரில் சிறப்பாக செயல்படுவதற்கான தன்னம்பிக்கையை கொடுத்தது.

கொழும்பு டெஸ்ட்டில் 2-வது இன்னிங்ஸில் ரன்கள் சேர்ப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அந்த ஆடுகளத்தில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த அஸ்வினுக்கு எதிராக ரன்களை எடுத்து உறுதியாக செயல்பட்டேன். அந்த ஆட்டத்தில் முதல் 5 ஓவர்களில் பெரிய அளவிலான ஷாட்களை மேற்கொள்ளக்கூடாது என நினைத்து செயல்பட்டேன். ஆனால் அது எளிதானது இல்லை என்பதை உணர்ந்தேன்.

ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை மேற்கொண்ட பிறகே இந்திய அணி பீல்டிங் வியூகத்தை மாற்றியது. இதுதான் எனது பாணி, என்னுடைய வசதிக்கு தகுந்தபடி விளையாட வேண்டும், வேறு எதையும் செய்யக்கூடாது. நீண்ட நேரம் பேட் செய்வதற்கு இதுதான் முக்கியம். மேலும் இதுவே எனது திட்டம். தூசிகள் நிறைந்த ஆடுகளத்தில் நாங்கள் பயிற்சிகள் மேற்கொண்டுள்ளோம். சுழற்பந்து வீச்சு தாக்குதலை எதிர்கொள்ள சிறந்த முறையில் தயாராகி உள்ளோம்.

இவ்வாறு திமுத் கருணா ரத்னே கூறினார்.