நைட் ஷிப்ட் பார்ப்பதால், மலட்டுத் தன்மை ஏற்படும் என்று, டாக்டர்கள் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், அதிக நாட்கள் இரவுப் பணி செய்யும் ஆண்களுக்கு, மலட்டுத் தன்மை அதிகரிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
சராசரியாக, ஒரு ஆண் அல்லது பெண் என யாராக இருந்தாலும், நாள் ஒன்றுக்கு, குறைந்தபட்சம் 8 மணிநேரம் உறங்க வேண்டியது அவசியம். அப்போதுதான், அவர்களின் உடல் உறுப்புகள், குறிப்பாக, இனப்பெருக்க உறுப்புகள் சீராக இயங்கும் என்றும், மாறுபட்ட பணி நேரங்கள் மனநலன், உடல்நலனை வெகுவாக சீரழிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய நவீன உலகில், பல்வேறு துறைகளிலும் இரவுப் பணி என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. பெண்களைவிட, ஆண்களே இரவுப் பணிகளை அதிகம் பார்க்கின்றனர்.
தொடர்ச்சியாக, இரவுப் பணி பார்ப்பதால், ஆண்களின் செக்ஸ் ஆர்வம் குறைய தொடங்குவதாக, மருத்துவர்கள் அறிக்கை குறிப்பிடுகிறது. ஆண்களின் இனப்பெருக்கத் திறன், ஆண் உறுப்பு செயல்பாட்டை இது பாதிப்பதோடு, சிறுநீர்த் தொற்றுகளையும் ஏற்படுத்துவதாக, மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆண்கள் மலட்டுத்தன்மை கொண்டவர்களாக மாற, இரவு நேரப்பணி வழிவகுக்கிறது. இவை எல்லாவற்றையும்விட ஆண் தன்மையின் அடையாளமாக உள்ள டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் சுரப்பையே, இரவுப் பணி பாதித்துவிடுவதாக உள்ளதென்றும், அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.