National

பசு பாதுகாப்பு கும்பலால் முதியவர் கொல்லப்பட்ட விவகாரம்: ராஜஸ்தான் சட்டசபையில் கடும் அமளி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் சந்தையில் பசுக்களை வாங்கி வாகனத்தில் ஏற்றி வந்த அரியான மாநிலத்தை சேர்ந்த பெக்லு கான் என்ற முதியவர் பசு பாதுகாப்பு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

மேலும், உரிய ஆவணங்களை காட்டியும் தங்களை தாக்கியதாக அவருடன் வந்தவர்கள் தெரிவித்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

 
இந்நிலையில் இந்த விவகாரம் ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் எதிரொலித்தது. இன்று அவை கூடியதுமே இவ்விவகாரத்தை கையிலெடுத்த காங்கிரஸ் கட்சியினர் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

இது தொடர்பாக பதிலளித்து பேசிய அம்மாநில உள்துறை மந்திரி ,” இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர், எனவே, இவ்விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும்” எனக் கூறினார்.

தொடர்ந்து அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் துணை சபாநாயகர் அவையை ஒரு மணி நேரம் ஒத்திவைத்தார். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் கூடிய அவை அமளியின்றி தொடர்ந்து நடைபெற்றது.