கேரள மாநிலம் நெடும்பாச்சேரி விமான நிலைய பகுதியில் டாக்சி டிரைவராக இருப்பவர் கடந்த மார்ச் மாதம் அப்பகுதி போலீஸ் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார்.
அதில் விமான நிலையத்தில் இந்திய-சிங்கப்பூர் கூட்டு நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரி ஒருவர் என்னிடம் பழக்கத்தில் இருந்தார். என்னை, அவர் தங்கியிருந்த லாட்ஜூக்கு அழைத்தார். அங்கு சென்றதும் அவர் என்னுடன் தவறான உறவில் ஈடுபட்டார்.
இதனால் எனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டது. இதனை நான் தட்டி கேட்ட போது அவர் என்னை தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.
இது பற்றி நெடும்பாச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இச்சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ந் தேதி நடந்திருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால் இது பற்றி அந்த டாக்சி டிரைவர் கடந்த மார்ச் மாதம் தான் புகார் செய்துள்ளார்.
இதற்காக காரணம் பற்றி விசாரணை நடத்திய போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட வெளிநாட்டுக்காரர் மீது இந்திய தண்டனை சட்டம் 377 (இயற்கைக்கு மாறான குற்றம்), 323, 506 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடினர்.
அதற்குள் அந்த நபர் தலைமறைவாகிவிட்டார். எனவே போலீசார் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு சென்று அங்கிருந்த அவரது உடமைகளை கைப்பற்றினர். மேலும் அவரது பாஸ்போர்ட் நகலையும் கைப்பற்றி, அவரை போலீஸ் தேடும் நபராக அறிவித்து, இது பற்றிய தகவலை அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.