சசிகலா வழக்கறிஞர் செந்தில் வீட்டில் கடந்த 3 தினங்களாக நடத்திய சோதனை நேற்று முன்தினம் இரவு முடிந்தது. வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு எடுத்துச் சென்றனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மோகனூர் சாலை கூட்டுறவு காலனி வீதியில் சசிகலா வழக்கறிஞர் எஸ்.செந்தில் வீடு உள்ளது. அவரது வீட்டில் கடந்த 9-ம் தேதி காலை கோவை, சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதுபோல், நாமக்கல் பி.வி.ஆர். வீதியில் உள்ள செந்திலின் உறவினரான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் வழக்கறிஞர் ஏ.வி.பாலுசாமி, செந்திலின் தொழில் பங்குதாரரான லாரி உரிமையாளர் சுப்ரமணியம், உதவி வழக்கறிஞர் பாண்டியன், நண்பர் பிரகாஷ் ஆகியோரது வீடு, அலுவலகம், கோழிப்பண்ணை உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த 3 தினங்களாக நடைபெற்ற சோதனை நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் நிறைவடைந்தது. சோதனையின்போது வழக்கறிஞர் செந்தில் வீட்டில் அவரது அறை மற்றும் லாக்கர் ஒன்றிற்கு ‘சீல்’ வைக்கப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் சோதனையின் முடிவில் செந்தில் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றனர்.
இதுபோல், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பாலுசாமி, சுப்ரமணியம், வழக்கறிஞர் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் பிரகாஷ் ஆகியோர் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சோதனையை நிறைவு செய்தனர்.