ஆர்.கே.நகர் தொகுதி மீனவர்களை திருவொற்றியூரில் இன்று சந்தித்த மு.க.ஸ்டாலின் மீனவ பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் கூறிய முக்கிய கோரிக்கைகளை குறிப்பு எடுத்துக் கொண்டார்.
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் சென்று ‘நமக்கு நாமே’ சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்தார்.
அப்போது விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், மீனவர்கள், வணிகர்கள், நெசவாளர்கள் என பல்வேறு தரப்பு மக்களையும் நேரில் சென்று சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
மு.க.ஸ்டாலினின் இந்த பயணத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதேபோல் இன்று ஆர்.கே.நகர் தொகுதி மீனவர்களை திருவொற்றியூரில் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த நிகழ்ச்சிக்கு ‘தேவைகளை நோக்க, தொல்லைகளை நீக்க’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
டி.கே.பி. திருமண மண்டபத்தில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆர்.கே.நகர் தொகுதி மீனவர்கள் 150 மீனவ பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அவர்கள் மத்தியில் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது மீனவ பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இலங்கை கடற்படையின் அத்துமீறல், அடாவடித்தனம் பற்றியும், மீனவர்கள் குறிப்பிட்டனர். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது பற்றியும் எடுத்து கூறினார்கள். ஆர்.கே.நகர் தொகுதியின் அடிப்படை பிரச்சினைகள் பற்றியும் பேசினார்கள்.
மீனவர்கள் கூறிய முக்கிய கோரிக்கைகளை மு.க.ஸ்டாலின் குறிப்பு எடுத்துக் கொண்டார். இறுதியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இறுதியில் அவர் ஆர்.கே. நகர் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றிக்கு பாடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.