இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, கல்ஃ ப் ஆயில் இந்தியா நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற தோனியைக் கவுரவிக்கும் வகையில், கல்ஃப் ஆயில் நிறுவனம் இந்தப் பதவியை வழங்கியுள்ளது.
இந்திய அணியின் மிகச்சிறந்த தலைவராகப் புகழப்படும் தோனி, பல முக்கியப் போட்டிகளில், அணி வெற்றிபெறுவதற்கான வியூகங்களை வகுத்து வெற்றியை நாட்டியவர். இவர், சமீபத்தில் தனது கேப்டன் பதவியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமைதாங்கிய விராட் கோலி, கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், தோனிக்கு தலைமைச் செயல் தலைவர் பதவி அளித்துள்ளது, கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனம்.
1983-ம் ஆண்டு, உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, 27 வருடங்கள் எட்டாக்கனியாக இருந்த கோப்பையை, தோனி தலைமையேற்று பெற்றுத்தந்தார். ஏப்ரல் 2 , 2011ல் இலங்கையுடனான இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்று, உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. ஆறு வருடங்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில், தோனியைக் கவுரவப்படுத்தும் நோக்கில் இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக, கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் டிக்கெட் பரிசோதகராக ஆரம்ப காலத்தில் பணியாற்றிய தோனி, இந்திய அணியின் தலைவராகி, இன்று ஒரு பெரிய நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். தோனியின் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் புகழாரம் சூட்டிவருகின்றனர்.