மிர்பூர் ஒருநாள் போட்டியில் வங்கதேச பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான், தோனி ஆகியோரிடையே ஆட்டத்தின் போது ஏற்பட்ட ‘மோதல்’ ஒன்றும் பெரிய விவகாரமல்ல என்று இரு அணி கேப்டன்களும் சமாதானம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தோனி கூறும்போது, “பவுலர் நினைத்தார் நான் விலகி ஓடுவேன் என்று, ஆனால் நானோ அவர் விலகுவார் என்று நினைத்தேன், ஆனால் இருவருமே அதைச் செய்யவில்லை. மோதிக்கொண்டோம், ஏனெனில் ரன்னை முடிக்க நான் அருகாமையான பாதையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மோதாமல் பவுலரைச் சுற்றி ஓடும்போதுதான் பேட்ஸ்மென்களை அவர்கள் ரன் அவுட் செய்கின்றனர். எனவே ஒன்று நான் வலது புறம் நகர்ந்து ஓடியிருக்க வேண்டும், அல்லது அவர் இடது புறமாக ஒதுங்கியிருக்க வேண்டும். ஆனால் இருவருமே அவ்வாறு நடக்கும் என்று எதிர்பார்த்து நடக்காமல் போனதால் ஒரு வகையான தெருச்சண்டை போல் ஆகிவிட்டது. ஆனால் நல்ல வேளையாக அவர் காயமடையவில்லை, நானும் காயமடையவில்லை.
இது போன்று எந்த ஒரு மேட்சிலும் நடக்கலாம். இது அவ்வளவு பெரிய விவகாரம் ஒன்றுமல்ல. நான் பவுலரிடம் இது பற்றி பிற்பாடு பேசினேன்” என்றார்.
வங்கதேச கேப்டன் மஷ்ரபே மொர்டசா கூறும்போது, “எந்த ஒரு போட்டியின் போதும் களத்தில் இப்படி நடப்பது தவிர்க்க முடியாததே. இறுதியில் கைகொடுத்து சுமுகமாகச் செல்லப் போகிறோம், இது ஒன்றும் மேட்டரேயல்ல” என்றார்.