காஷ்மீர் மாநிலத்தின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகர் விமான நிலையத்தில் நேற்று கையெறி குண்டுகளுடன் வந்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். விமான நிலையத்தின் முதல் நுழைவு வாயிலில் பாதுகாப்பு படையினர் சந்தேகத்தின் பேரில் அவரை பரிசோதித்தபோது இந்த கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கைதான போபால் முக்கியா, பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வருவதாக தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தபோது, உரி முகாமில் உள்ள ஒரு ராணுவ உயரதிகாரி அந்த குண்டுகளை தந்தனுப்பியதாகவும், டெல்லியில் உள்ள ஒரு நபரிடம் அவற்றை ஒப்படைக்குமாறு கூறியதாகவும் பிடிபட்ட நபர் வாக்குமூலம் அளித்தார்.
இதையடைத்து, சிறையில் அடைப்பதற்காக போலீசார் அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, ராணுவத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் போபால் முக்கியாவுக்கு கையெறி குண்டுகள் கிடைத்தது எப்படி? என்பது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் அவரை தங்கலிடம் ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவர்களை ராணுவ உயரதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டதுடன், இவ்வழக்கு தொடர்பான மறு விசாரணையை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.