பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா குடும்பத்தினரால் ரூ.280 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டிருப்பதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர். விவேக், கிருஷ்ணபிரியா வீடுகளில் 4 நாட்களாக நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்தது.
சசிகலா, திவாகரன், டிடிவி தினகரன், விவேக், கிருஷ்ணபிரியா உட்பட அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரது வீடுகளில் கடந்த 9-ம் தேதி முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் மொத்தம் 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 3 நாளில் 167 இடங்களில் சோதனை நடத்தி முடிக்கப்பட்டது. 4-வது நாளான நேற்று 20 இடங்களில் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டது. சென்னையில் ஜெயா டிவி அலுவலகம், ஜெயா டிவியின் முதன்மை நிர்வாக அதிகாரியான விவேக்கின் கோடம்பாக்கம் வீடு, கிண்டியில் உள்ள ஜாஸ் சினிமாஸ் நிர்வாக அலுவலகம், இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவின் தி.நகர் வீடு, படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை ஆகிய இடங்களில் நேற்று 4-வது நாளாக சோதனை நடைபெற்றது.
இது தொடர்பாக வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது;
கடந்த 4 நாட்களாக நடந்த சோதனையில் ஆயிரக்கணக்கான சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளன. போலி நிறுவனங்கள் நடத்தியதற்கான ஆவணங்கள், பணப் பரிமாற்றம் செய்ததற்கான தகவல்கள், பென்டிரைவ், ஹார்டுடிஸ்க், வங்கி ஆவணங்கள் உட்பட பலவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக 50 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த 50 நாட்கள் இடைவெளியில் சசிகலா குடும்பத்தினர், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் ரூ.280 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கான சில ஆவணங்களையும் கைப்பற்றி இருக்கிறோம். இதில், புதுச்சேரியில் உள்ள நகைக்கடை மூலம் மட்டுமே ரூ.168 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றியுள்ளனர்.
சோதனையில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி முழுமையாக முடியவில்லை. அந்தப் பணி முடிந்த பின்னரே மொத்த விவரமும் தெரியவரும். திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா ஆகியோர் தொடர்புடைய இடங்களில் இருந்துதான் அதிகமான ஆவணங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இவர்களின் வீடுகளில் கடந்த 9-ம் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் சோதனை நடத்தப்பட்டது. இங்கு நடத்தப்பட்ட சோதனை நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெயா டிவி அலுவலகம், கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சில இடங்களில் 5-வது நாளாக இன்றும் தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.