திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் நத்தன்கோடு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.
சாத்தான் வழிபாடு நடத்த கேதல் ஜீன்சன்ராஜா என்ற வாலிபர் தனது தாய், தந்தை, சகோதரி மற்றும் உறவு பெண்ணை கோடாரியால் வெட்டி படுகொலை செய்து அவர்களது உடலையும் எரித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
கேதல் ஜீன்சன்ராஜாவை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, அவர் இணையதளம் மூலம் பில்லி சூனிய பூஜைகள் பற்றி தெரிந்து கொண்டதாகவும், சாத்தான் வழிபாடு நடத்தி ஒருவர் உடலில் இருந்து உயிரை பிரிவதை பார்ப்பதற்காக இப்படி 4 பேரை கொன்றதாக கூறினார். மேலும் அவர், கொலை செய்தது தொடர்பாக எந்தவித பதட்டமும் இன்றி சிரித்த முகத்துடன் காணப்படுவதும் போலீசாருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து கேதல் ஜீன்சன்ராஜாவின் மனநிலை தொடர்பாக டாக்டர்கள் மூலம் போலீசார் பரிசோதனை செய்துள்ளனர். அது தொடர்பான அறிக்கை இதுவரை போலீசாரிடம் வழங்கப்பட உள்ளது.
அந்த அறிக்கை வந்த பிறகுதான் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா? என்பது தெரிய வரும். இதற்கிடையில் கேதல் ஜீன்சன்ராஜா வருகிற 20-ந்தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கேட்டு திருவனந்தபுரம் கோர்ட்டில் நத்தன்கோடு போலீசார் மனுதாக்கல் செய்தனர்.
அதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து கேதல் ஜீன்சன்ராஜாவை போலீசார் தங்களது காவலில் எடுத்து மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர். போலீசாரிடம் ஏற்கனவே சாத்தான் வழிபாட்டுக்காக கொலை செய்ததாக கூறி இருந்த கேதல் ஜீன்சன்ராஜா தற்போது அதை மாற்றி தனது குடும்பத்தினர் தன் மீது அன்பு செலுத்தாததால் ஏற்பட்ட கோபத்தில் இந்த கொலையை செய்ததாக கூறினார்.
அதன் பிறகு அதையும் மாற்றி தான் தொழில் தொடங்க பெற்றோர் பணம் தராததால் அவர்களை தீர்த்துக்கட்டியதாக முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார்.
இதனால் கேதல் ஜீன்சன்ராஜாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். உண்மை கண்டறியும் சோதனை மூலம் இந்த கொலையில் மறைந்துள்ள மர்மங்களை வெளியில் கொண்டு வர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.