political

‘யூகலிப்டஸ்’ மரங்களை அகற்றுங்கள் – சிறையிலிருந்து வைகோ கடிதம்

தமிழ்நாட்டில் அதிகமாகக் காணப்படும் தைலமரம் என்று அழைக்கப்படும் ‘யூகலிப்டஸ்’ மரத்தை அகற்ற வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அரசு உயரதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

2009-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது ஜாமீனை மறுத்து சிறைக்குச் செல்வதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரை 15 நாள்கள் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வைகோ சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த சில மாதங்களாக வைகோ தமிழகத்தில் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அவரே நேரடியாக கருவேல மரங்களை வெட்டி வந்தார்.

தற்போது சிறையிலிருக்கும் அவர், தைலமரம் எனப்படும் ‘யூகலிப்டஸ்’ மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசு அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தலைமைச் செயலாளர், வனத்துறை அதிகாரிகள், அரசுத் துறைச் செயலாளர்கள் மற்றும், மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறையிலிருந்து வைகோ எழுதியுள்ள அந்த கடிதத்தில், ‘மண்ணின் ஈரப்பதம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தை சீர்குலைக்கக்கூடிய ‘யூக்கலிப்டஸ்’ மரங்களை முற்றிலும் அகற்றி நாட்டு மரங்களை நடவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.