political

”குஷ்பூவுக்கு இஸ்லாமிய சட்டம் தெரியாது” – சொல்பவர் யாரென்று தெரியுமா?

முத்தலாக் விவகாரம்’ குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் பேசியதைத் தொடர்ந்து,  மறுபடியும் அரசியல் அரங்கில் இவ்விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது! ‘முத்தலாக் முறையில் மாற்றம் வரவேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் நடிகையுமான குஷ்பூ கருத்து தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் மூத்த தலைவர் முனைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவிடம் இவ்விவகாரம் குறித்துப் பேசினோம்….

”மீண்டும் ‘முத்தலாக் விவகாரம்’ நாடு முழுக்க விவாதத்தைக் கிளப்பியிருக்கும் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

”முத்தலாக் முறையினால், பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரம் ஒன்று நடைபெற்றுவருகிறது. உண்மை நிலவரம் என்னவென்றால், இந்தியாவில் வாழ்ந்துவரக்கூடிய சமூகங்களிலேயே குறைவான மணவிலக்கு விகிதாச்சாரம் என்பது இஸ்லாம் சமூகத்தில்தான் இருக்கிறது. இதுசம்பந்தமான புள்ளிவிவரப் பட்டியலும் ஆதாரப் பூர்வமாக இருக்கிறது.
இஸ்லாமியப் பெண்கள் மீது இந்தளவுக்கு பரிதாபப்பட்டு, அவர்களுக்கு நீதி வேண்டும் என்றெல்லாம் சொல்லக்கூடிய மோடியின் இரட்டை நாக்கு பற்றி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதே மோடி குஜராத்தில் முதல்வராக ஆட்சி செய்தபோதுதான், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் விதவையாக்கப்பட்டனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரே உயிருடன் எரிக்கப்பட்டார். இப்போதுவரை அவரது மனைவி நீதிகேட்டு அலைந்துகொண்டிருக்கிறார்.

இந்தப் பெண்களுக்கெல்லாம் யார் நீதி வழங்குவது? எனவே, முஸ்லிம் பெண்களுக்கு நீதி வேண்டும் என்று உண்மையிலேயே மோடி விரும்பினால், விதவையாக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு நீதி கிடைக்கச் செய்யட்டும்.
இதுதவிர, ‘பசு பாதுகாவலர்கள்’ என்ற பெயரில், எத்தனையோ இஸ்லாமிய ஆண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இஸ்லாமியப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கெல்லாம் எப்போது நீதி கிடைப்பது? ஆக, மோடியின் இந்தப் பேச்சு என்பது அரசியல் விளையாட்டு; இஸ்லாம் சமூகத்தின் மத்தியில், ஏதாவதொரு வகையில்,  தங்களுடைய திட்டத்துக்கு ஆதரவு கிடைக்காதா? என்ற ஆதங்கத்தில் பேசுகிற பேச்சு இது. 2021-ல் இந்தியாவில் முஸ்லீம்களோ, கிறிஸ்தவர்களோ இருக்கமுடியாது’ என்றெல்லாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே பேசக்கூடிய கட்சியில்தான் மோடி இருக்கிறார். எனவே, முதலில் இவர்களை எல்லாம் திருத்தக்கூடிய வேலைகளை மோடி பார்க்கட்டும்.”

குஷ்பூ

”நடிகை குஷ்பூவும் ‘முத்தலாக் முறையில் மாற்றம் வரவேண்டும்’ என்று கூறுகிறாரே?”

”யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். குறிப்பாக இந்த விஷயம் சம்பந்தமாக யாரேனும் கருத்து தெரிவிக்கும்போது அது ஊடகத்தில் பெரிய அளவில் பேசப்படுகிறது. ஆனால், ‘எங்களுக்கு இஸ்லாமிய சட்டங்களே போதும்; அதுவே எங்களுக்கு உரிய பாதுகாப்பைத் தருகிறது’ என்றெல்லாம் சொல்லக்கூடிய முஸ்லிம் பெண்களின் கருத்துகள் ஊடகத்தில் பெரிதுபடுத்தப்படுவதில்லை. குறிப்பாக, ‘எங்களுக்கு முஸ்லிம் தனியார் சட்டம் போதும்; பொது சிவில் சட்டம் தேவையில்லை’ என்று கோடிக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கையொப்பம் இட்டு சட்ட ஆணையத்துக்கே அனுப்பிவைத்திருக்கிறார்கள். ஆனால், இதுபற்றிய செய்திகள் ஊடகத்தில் வருவதில்லை. சில ஆயிரம் பேர் முத்தலாக் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து போட்டுள்ளதான செய்திகள் மட்டும் பெரிதுபடுத்தப்படுகிறது.

அடுத்ததாக ஒரு முக்கியமான விஷயம்… ‘முஸ்லிம் சமூகத்தினுடைய எதார்த்த நிலையைப் பிரதிபலிக்கக்கூடிய கருத்தை சொல்லக்கூடியவர்கள் குஷ்பூ போன்றவர்கள் இல்லை’. எங்களைப் பொருத்தவரையில், முஸ்லிம் சமூகத்தின் எந்த ஒரு பிரதிநிதியாகவும் குஷ்பூவை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனெனில், அவருக்கு முதலில் இஸ்லாமிய சட்டங்கள் என்னவேன்றே தெரியாது. இஸ்லாமிய சட்டங்கள் என்றால் என்ன? இஸ்லாமிய குடும்பவியல் என்றால் என்ன… என்பது போன்ற அடிப்படை  அறிவுகூட இல்லாதவர்கள்…. இந்த சமூகத்தில் பிறந்தவர்கள் என்பதாலேயே அவர்கள் சொல்வதை எந்த ஒரு முஸ்லிமும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தப் பிரச்னை புவியியல் சம்பந்தப்பட்டது; மதம் சார்ந்ததல்ல…. மார்க்க சட்டங்கள் அடிப்படையிலானது. எனவே, இந்த சட்டத்தைப் பற்றிய அடிப்படையான அறிவு இல்லாதவர்கள், ஆனால், இந்த சமூகத்தில் பிறந்தவர்கள் என்பதாலேயே அவர்கள் சொல்லக்கூடிய கருத்துகள் எல்லாம் சரியானதாகத்தான் இருக்கும் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.”

மோடி

”எதிர் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லையெனில், இப்பிரச்னைக்குத் தீர்வாக என்ன சொல்ல வருகிறீர்கள்?”

” 1932-ல் அன்னிபெசன்ட் அம்மையார் தனது உரையில், ”30 ஆண்டுகளுக்கு முன்புதான் இங்கிலாந்தில், ‘பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு’ என்ற நிலைமையே ஏற்பட்டுள்ளது. ஆனால், 1,400 ஆண்டுகளுக்கு முன்பே ‘பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு’ என்பதை நிலைநாட்டிய மார்க்கம் இஸ்லாம்” என்று சொல்கிறார். ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல், இப்போது வரையிலும் இது நடைமுறையிலும் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதுதான் இதில் முக்கியமானது. இதேபோல், ‘பெண் சிசுக் கொலை’ சம்பவங்களிலும் மற்ற சமூகங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இஸ்லாம் சமூகத்தில்தான் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. ஏனெனில், ‘ஒரு பெண்ணை பெற்றெடுத்து நல்ல முறையிலே வளர்த்து ஆளாக்கக்கூடியவர்கள் சொர்க்கத்துக்கு உரியவர்கள்’ என்று நபிகள் நாயகமே சொல்லியிருக்கிறார். அதேபோல், மணவிலக்கு உரிமையை பெண்களுக்கும் தந்திருக்கக்கூடிய மார்க்கமும் இஸ்லாம்தான்.

‘முத்தலாக் முறையால் இஸ்லாமியப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக…’ மோடி பேசிய அதே தினத்தன்று லக்னோவில், ‘அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்’ செயற்குழுக் கூட்டத்தை நடத்தியுள்ளது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களில் முக்கியமானது, ‘முத்தலாக் முறையில் மணவிலக்கு பெறக்கூடியவர்களை சமூக பகிஷ்காரம் செய்யவேண்டும்’ என்பது. ஆக, ‘முத்தலாக்’ என்பது ஒரு வெறுக்கத்தக்க நடைமுறை என்பதை ‘அனைத்திந்திய முஸ்லீம் தனியார் சட்ட வாரியமே’ தெளிவாக உணர்த்தியுள்ளது. மேலும், தலாக் என்பது எப்படி செய்யப்பட வேண்டும், எது முறையான தலாக், எது முறையற்ற தலாக் என்பது போன்ற விவரங்களையும் அந்த வாரியமே கொடுத்துள்ளது.”