திருவனந்தபுரம்:
நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகும் சாலை விபத்துகளால் ஆண்டுதோறும் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் சாலை விபத்துகளினால் பலியாவதற்கு மூலக்காரணம் போதையில் வாகனம் ஓட்டுவதுதான்.
எனவே, நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் இருக்கும் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என சில தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் தனிநபர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், தேசிய நெடுஞ்சாலைகளில் ஓரத்தில் சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவையடுத்து, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஓரத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மதுக்கடைகள், நட்சத்திர ஓட்டல்களில் இருந்த பார்கள் அனைத்தும் அதிரடியாக மூடப்பட்டன.
ஆனால், கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பரவூரை சேர்ந்த தேசிய நெடுஞ்சாலை 17-ன் ஓரத்தில் ‘ஐஷ்வர்யா ரெஸ்ட்டோபார்’ என்ற பெயரில் மது விடுதியை நடத்திவந்த மேனேஜர் மட்டும் சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவில் இருந்து தப்பிக்க மாற்றுவழி என்ன? என்று ‘மாத்தி’ யோசித்தார்.
ரூம் போடாமலேயே அவர் செய்த யோசனையின் விளைவாக அவரது மூளையில் மின்னல் வேகத்தில் ஒரு புதிய திட்டம் உதித்தது.
தற்போது, தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் சுமார் 200-300 மீட்டர் தூரத்தில் நமது பார் இருப்பதால் தானே மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது? பாரை ஒட்டி இருக்கும் நமக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்தி, மதுக்கடையை அப்படியே பின்நோக்கி நகர்த்தி சென்று விட்டால் என்ன?.
சுப்ரீம் கோர்ட்டையும் சமாதானப்படுத்தியதுபோல் ஆகி விடும். நமது ‘மாமூல் வாடிக்கையாளர்களான’ குடிமகன்களை திருப்திப்படுத்தியதாகவும் இருக்கும் என அவர் தீர்மானித்தார்.
தீர்மானத்துக்கு செயல்வடிவம் கொடுக்க ஆரம்பித்த அவர் மதுக்கடையை பழைய இடத்தில் இருந்து மாற்றி சுமார் 200-300 மீட்டர் தூரத்தில் பின்நோக்கி புதிய கடையை அமைத்தார்.
பழைய கடையின் நுழைவு வாசலில் இருந்து குறுக்கும் நெடுக்குமாக சிமெண்ட் சிலாப் தடுப்புகளை அமைத்து, ‘டென்ட்டு கொட்டாய்’ டிக்கெட் கவுண்ட்டரைப் போன்ற பல திருப்பங்கள் கொண்ட பாதையை வளைத்து, வளைத்து உருவாக்கினார்.
அவ்வழியாக நெடுஞ்சாலையில் வாகனத்தில் செல்லும் குடிமகன்களை கண்சிமிட்டி அழைப்பதற்காக பழைய இடத்தில் இருந்த கடையின் வாசலில் ‘பார் வசதி உண்டு’ என்ற கவர்ச்சிகரமான பெயர் பலகை மட்டுமே தற்போது உள்ளது.
ஆனால், மதுக்கடையும் பாரும் மட்டும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தையும் கடந்து அமைக்கப்பட்டுள்ளதால் சுப்ரீம் கோர்ட்டோ, மாவட்ட கலால் துறை அதிகாரிகளோ, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கடமைப்பட்டுள்ள போலீசாரோ இந்த மதுக்கடையை தடை செய்ய முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது.
அவ்வழியாக வழக்கமாக செல்லும் குடிமகன்களும், அருகாமையில் இருக்கும் ரெகுலர் கஸ்டமர்களும் எவ்வித தடையும் இன்றி தங்களது ‘தாக சாந்திக்கு’ இந்த ‘ஐஷ்வர்யா ரெஸ்ட்டோபார்’-ஐ தற்போதும் முற்றுகையிட்டு வருகின்றனர்.