ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஆளும் அ.தி.மு.க. இரண்டாகப் பிரிந்து செயல்பட்டதால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் இரு அணிகளும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டு வேட்பாளராகவும் நிறுத்தப்பட்ட டி.டி.வி. தினகரன் மீது கட்சியில் அதிருப்தி வெளிப்பட்டது. இதன் காரணமாக அவர் தலையீடு எதுவும் இல்லாமல் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முடிவு செய்தனர். இதனை ஏற்ற தினகரனும், கட்சியில் இருந்து ஒதுங்கிவிடுவதாக கூறினார். இதையடுத்து இரு அணிகளையும் இணைக்கும் பூர்வாங்க பணிகளை தொடங்கி உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மாநில அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இன்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, நட்பு ரீதியாகவே ஆளுநரை சந்தித்ததாக தெரிவித்தார்.