வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் தமிழ் புத்தாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டார்.
பிறகு நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சித்திரை முதல் நாள், தமிழ் புத்தாண்டாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எல்லா வற்றிலும் அரசியலை புகுத்துவது என்பது சாத்தியமாகாது.
தமிழகத்தில் விநோத நிலை உள்ளது. 3 ஆண்டுகளில் மத்திய பா.ஜ.க. அரசு மகத்தான சாதனைகளை செய்துள்ளது. உலகம் போற்றும் தலைவராக மோடி திகழ்கிறார்.
ஆனால் தமிழக தலைவர்கள் மோடியை பாராட்ட தயங்குகிறார்கள். வீண் பழி போடுவதற்கு மட்டும் அவர்கள் தயங்குவதில்லை.
போராட்டம் மூலம் பிரதமரை அழுத்தம் கொடுத்து சந்திக்கும் நிலையை உருவாக்கினால், வேறு எந்த வேலையையும் செய்ய முடியாது. நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது.
மோடி அரசு, விவசாயிகளுக்கான பயிர் கடன் திட்டத்தை எளிமை படுத்தியுள்ளது. தமிழகத்தில் விஞ்ஞான முயற்சிக்கு எதிரான போராட்டங்கள், மோடிக்கு எதிராக தூண்டி விடப்படுகிறது.
இதனால் விவசாயிகள் பலிகிடாவாகிறார்கள். டெல்லியில் போராடும் அய்யாக்கண்ணு தமிழகம் வரவேண்டும். அனைத்து விவசாய சங்கங்களுடன் ஒருங்கிணைந்து பிரச்சினைகளுக்கு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆனால், மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தை போலீசார் மூலம் தடியடி நடத்தி கலைக்கிறது.
தென்னை நார் பொருட்கள் கூட்டு உற்பத்தி நிறுவனம் தமிழகத்தில் 19 இடங்களில் உள்ளது. இதன் மூலம் கடந்தாண்டு ரூ.1650 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
இந்தாண்டு ரூ.2200 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 4 வழிச்சாலைக்கு வாஜ்பாய் அரசு அடிக்கல் நாட்டியது போலவே, நதிநீர் இணைப்பு திட்டத்தை மோடி தொடங்கி வைப்பார் என்று நம்பிக்கை உள்ளது.
காட்பாடியில் பள்ளி கட்டிட பணியில் விபத்து ஏற்பட்டுள்ளது புதிய கட்டிடம் கட்டும் முன்பு அனுமதி பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்ய வேண்டும். புதிய கட்டிடம் கட்டுவதற்கான கட்டுப்பாடுகளை தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழக அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இது சட்ட பூர்வமான அரசு. இதற்கு புறம்பாகவும், எதிராகவும் செயல்பட்டால் மத்திய அரசு வேடிக்கை பார்க்காது. அமைச்சராக இருந்தாலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
பேட்டியின் போது, பா.ஜ.க. நிர்வாகிகள் தசரதன், ராஜேந்திரன், ஜெகநாதன், எஸ்.எல்.பாபு, கலைமகள் இளங்கோவன், பாஸ்கர், மனோகரன் உள்ளிட்டோர் இருந்தனர்.