சென்னை:
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு, ஆர்.கே.நகரில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் பணப்பட்டு வாடா மட்டுமே காரணம் அல்ல என்று தெரிய வந்துள்ளது.
அரசு மணல் குவாரிகளை நடத்த உரிமம் பெற்று, அதில் முறைகேடுகள் செய்ததாக கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேகர் ரெட்டி கொடுத்த பல்வேறு தகவல்கள் தான் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த அதிரடி சோதனைக்கு அடிப்படை காரணம் என்று கூறப்படுகிறது.
மணல் காண்டிராக்டர் சேகர் ரெட்டி முறைகேடுகளில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு தகவல் வந்ததும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதில் ரூ.132 கோடி பணம், 177 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சேகர் ரெட்டியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
அந்த வாக்குமூலம் 124 பக்கம் அளவுக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குமூலத்தில் சேகர் ரெட்டி தனக்கு தொழில் ரீதியாக யார்-யார் எல்லாம் உதவியாக இருந்தனர் என்று கூறியுள்ளார்.
அதில் ஒரு இடத்தில், “அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடன் மறைமுக பங்கு தாரராக இருக்கிறார்” என்று சேகர்ரெட்டி கூறி இருப்பதாக கூறப்படுகிறது.
சேகர் ரெட்டி வாக்குமூலம் கொடுப்பதற்கு முன்பே விஜயபாஸ்கர் பற்றிய தகவல்களை வருமான வரித்துறை சேகரித்திருந்தது. சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலம், அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வருமான வரித்துறையினரின் சந்தேகங்களை உறுதிப்படுத்துவதாக இருந்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரையும், அவரது பணபரிவர்த்தனைகளை கடந்த 9 மாதமாக கண்காணித்து வந்ததாக வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு காரணமாக, அமைச்சர் விஜயபாஸ்கர், இலுப்பூரில் எஸ்.ஏ.சுப்பையா என்பவர் பெயரில் மணல் குவாரி நடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த மணல் குவாரி வளாகத்தில் தன் மனைவி பெயரிலும் அவர் ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
நேற்று அங்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதுபற்றி ஒரு அதிகாரி கூறுகையில், “அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினர் பெயரில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் சார்பில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மணல், ஜல்லிகள் குவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் முதன் முதலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம்தான் வருமான வரித்துறை அதிகாரிகளின் சந்தேகப் பார்வை வளையத்துக்குள் வந்தார். கடந்த ஜூலை மாதம் பான், குட்கா பொருட்கள் விற்பனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது ஒரு குட்கா அதிபர் வீட்டில் இருந்து ரகசிய டைரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அந்த டைரியில், சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் குட்காவுக்கு தடை விதிக்காமல் இருப்பதற்காக விஜயபாஸ்கருக்கு பணம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்ததாம்.
ஒவ்வொரு மாதமும் அந்த குட்கா அதிபர், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பல கோடி ரூபாயை மாமூல் போல் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு அதிகாரிகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இயலவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி சேகர்ரெட்டி வீட்டில் சோதனை நடந்தபோது கிடைத்த ஆவணங்கள், விஜயபாஸ்கருக்கு மணல் காண்டிராக்டர், குட்கா அதிபரிடம் இருந்த ரகசிய தொடர்புகளை உறுதிப்படுத்துவதாக இருந்தது.
சேகர் ரெட்டியை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அவரது கல்லூரி தோழர் ராமச்சந்திரன் அறிமுகம் செய்து வைத்தது தெரிய வந்துள்ளது. மற்றொரு கல்லூரி நண்பர் மூலம் சசிகலா குடும்பத்தினருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் நெருக்கமானதும், வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் மறைமுக பங்குதாராக இருப்பதாக கூறப்படும் எஸ்.ஆர்.எஸ். மைன்ஸ் நிறுவனம், தினமும் தமிழ் நாட்டின் ஆறுகளில் இருந்து சுமார் 55 ஆயிரம் லாரி மணலை விற்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் குறைவாகவே கணக்கு காட்டப்படும்.
இதனால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.15,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ரூ.15,000 கோடியில் கணிசமான பணத்தை சேகர் ரெட்டி தன் பங்கு தாரர்களுக்கு பிரித்துக் கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.
இதை அடிப்படையாக வைத்து அமைச்சர் விஜய பாஸ்கர் எவ்வளவு பணம் பெற்றிருப்பார் என்று வருமான வரித்துறையினர் கணக்கிட்டுள்ளனர். இந்த கணக்கீடுதான் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடி சோதனைக்கு வித்திட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.