political

தனிநபர் மானநஷ்ட வழக்கில் அரசின் பணத்தை செலவிடுவதா?: கெஜ்ரிவாலுக்கு ரிஜிஜூ கேள்வி

புதுடெல்லி:
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக கெஜ்ரிவால் மீதும் அசுத்தோஷ், குமார் விஸ்வாஸ் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் 5 பேர் மீதும் அருண் ஜெட்லி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு டெல்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடி வருபவர் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. இவருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ரூ. 3 கோடிக்கு மேல் கட்டணம் கொடுக்க வேண்டியது உள்ளது என தகவல்கள் வெளியாகியது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் ராம் ஜெத்மலானிக்கு கொடுக்க வேண்டிய கட்டண தொகையை வழங்குமாறு, மாநில அரசை சிசோடியா கேட்டுக் கொண்டு உள்ளார். டெல்லி மாநில சட்ட அமைச்சகம் டெல்லி கவர்னரின் இசைவை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தன் மீதான மானநஷ்ட வழக்கின் விசாரணைக்கு அரசின் பணத்தை செலவிடுவதா என்று மத்திய இணை மந்திரி ரிஜிஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிரென் ரிஜிஜூ, “தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக எந்த முதலமைச்சரும் அரசின் கருவூலத்தில் இருந்து நிதியை பயன்படுத்தியதாக எனக்கு நினைவில்லை.
அருண் ஜெட்லியை பற்றி அவர் என்ன சொல்லி இருந்தாலும், அதற்கு அவர் தான் பொறுப்பு. அதனால், அதற்கு டெல்லி மக்கள் எதற்காக பணம் செலுத்த வேண்டும்? இந்த வழக்கினை நடத்த வேண்டும் என்று டெல்லி மக்கள் கேட்டுக் கொண்டனரா?” என்று கூறினார்.