திருவனந்தபுரம்:
கேரளாவில் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்டு கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. கடந்த தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து தற்போது பினராய்விஜயன் முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
கேரள அரசியலில் எப்படியாவது கால் ஊன்றி விடவேண்டும் என்று பாரதீயஜனதா கட்சி தீவிரமாக போராடி வருகிறது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என்று அனைத்து தேர்தல்களிலும் பாரதீயஜனதா கடும் பலப்பரீட்சையில் ஈடுபட்டு வருகிறது.
இதன் பலனாக பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரேஒரு எம்.எல்.ஏ. மட்டும் கிடைத்து உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் ஓ.ராஜகோபால் மட்டும் பாரதீய ஜனதா சார்பில் வெற்றிபெற முடிந்தது. தேர்தலுக்கு பிறகு கம்யூனிஸ்டு- பாரதீயஜனதா தொண்டர்களின் மோதலும் அதிகரித்து உள்ளது.
அந்த மோதல் பல இடங்களில் அரசியல் கொலையாக மாறிவிட்டது. இந்த நிலையில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், பிரதமர் நரேந்திர மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த மத்திய, மாநில உறவுகள் பற்றிய கருத்தரங்கில் பேசிய பினராய் விஜயன் கூறியதாவது:-
ஒரு முதல்-அமைச்சர் பிரதமரை அனுகி மாநிலத்தின் தேவைகளை எடுத்துக் கூறினால் அதை கேட்டு நிறைவேற்றிக் கொடுப்பது பிரதமரின் கடமை. ஆனால் கேரளா விஷயத்தில் மத்திய அரசுடன் மோசமான அனுபவங்களே ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசு பலமாகவும், மாநில அரசு வளமாகவும் இருந்தால்தான் கூட்டாட்சி முறை நிலைக்கும்.
ஆனால் மத்திய அரசு மாநில அரசுகளின் அதிகாரங்களை பறித்து வருகிறது. மாநிலங்களின் நலன்களை கருதாமல் சார்க் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களில் மத்திய அரசு கையெழுத்து போட்டுள்ளது. இதனால் கேரளாவில் ரப்பர் மற்றும் தேங்காய் எண்ணை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்ததுபோல மாநிலங்களை காலனி போல பிரதமர் மோடி நடத்துகிறார்.
மாநிலங்கள் நிறைவேற்றிய பல்வேறு சட்ட விதிகளை கவர்னர்களும், ஜனாதிபதியும் நிராகரிக்கும் நிகழ்வுகளும் அதிகரித்து விட்டது. பல்வேறு வகையான விதிமுறைகளை மத்திய அரசு மாநிலங்கள் மீது திணிக்கிறது. மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ். போன்று செயல்படுகிறது. மாநிலங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு அதை செயல் படுத்தாமல் அதிகாரங்களை குவித்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.