political

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பதிலால் கொந்தளித்த தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி

’வாழும் கலை’ நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு சுத்தமாக பொறுப்பே இல்லை என தேசிய பசுமை தீர்ப்பாயம் கடிந்துகொண்டுள்ளது.

வாழும் கலை அமைப்பின் சார்பாக கடந்த ஆண்டு ‘உலக கலாசார விழா’ யமுனை நதிக்கரையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் முடிவில் யமுனை நதியின் சூழல் சீர்கெட்டுவிட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி அப்புகாரினை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் யமுனை நதியின் சுற்றுச்சூழல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் குற்றச்சாட்டுக்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அளித்த பதில் தீர்ப்பாயக்குழுவை கோபமடையச் செய்துள்ளது. பசுமைத் தீர்ப்பாயத்தின் மேலேயே குற்றம் சுமத்தும் ரவிசங்கர், யமுனை நதி அவ்வளவு தூய்மையானது, சீர்கெட்டுவிடும் என்றால் நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பே தடுத்திருக்க வேண்டியது தானே, எனக் கூறியது தான் தற்போது பசுமைத் தீர்ப்பாயத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.

ரவிசங்கரின் பதிலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதிபதி, ’ரவிசங்கர் உங்களுக்கு சிறிதளவு கூட பொறுப்புணர்ச்சியே இல்லை. எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற சுதந்திரத்தை தங்களுக்குக் கொடுத்தது யார். உங்கள் செயல் அதிர்ச்சியளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

ரவிசங்கரின் கலாசார விழாவால் முற்றிலும் மாசடைந்த யமுனையை சீர் செய்து மீட்க 42 கோடி ரூபாய் செலவாகும் என பசுமைத் தீர்ப்பாயம் நிபுணர்கள் குழு மீட்பு அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.