political

நாடு முழுவதும் தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 83 ஆயிரம் வழக்குகள் இன்று ஒரே நாளில் விசாரணை

சென்னை:

நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை விரைவாக முடிவுக்கு கொண்டு வர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, இரண்டாவது சனிக்கிழமை லோக் அதாலத் என்று மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.

இந்த லோக் அதாலத்தில் இரு தரப்பினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதால், இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. அதே நேரம், வழக்குகளும் நீண்ட காலத்துக்கு இழுத்தடிக்கப்படாமல், விரைவாக முடிவுக்கு வரும்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நாடு முழுவதும் தேசிய லோக் அதாலத் இன்று நடைபெறுகிறது. சென்னை ஐகோர்ட்டில், ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.வி.முரளிதரன், எம்.கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் 3 அமர்வுகள் அமைக்கப்பட்டது.

அதேபோல, ஐகோர்ட்டு மதுரை கிளையில், ஐகோர்ட்டு நீதிபதிகள் பி.கோகுல் தாஸ், நிஷாபானு ஆகியோர் தலைமையில் இரு அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், ஓய்வுப் பெற்ற நீதிபதிகள் தலைமையில் மாநிலம் முழுவதும் 335 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அமர்வுகளில், வங்கி தொடர்பான வழக்கு, விபத்து வழக்கு, செக்மோசடி வழக்கு, மின்சாரம், போக்குவரத்து, நில ஆர்ஜிதம், வருவாய் துறை, அரசு பணியாளர்கள் தொடர்பான வழக்குகள் என்று சுமார் 83 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

சென்னை ஐகோர்ட்டில் நடைபெறும் லோக் அதாலத்தை சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எஸ்.மணிகுமார் மேற்பார்வையிட்டார். அங்கு வந்திருக்கும் அரசு அதிகாரிகள், வக்கீல்கள் உள்ளிட்டோரிடம் வழக்குகளை இருதரப்பு சமரசத்தின் அடிப்படையில் விரைவாக முடிப்பதால், அனைவருக்கும் நல்லது. தேவையில்லாத பணச் செலவு, கால விரயம் தவிர்க்கலாம் என்றும் அறிவுரை கூறினார்.

இந்த லோக் அதாலத்தில் முடிவுக்கு வரும் வழக்குகளின் விவரம் இன்று மாலையில் வெளியாகும் என்று தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலாளர் நீதிபதி நஷிர்அகமது கூறினார்.