political

புதிய பல் மருத்துவ கல்லூரியை அறிவிப்பதா?: எடப்பாடி பழனிசாமிக்கு தமிழிசை கண்டனம்

சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன கூறியதாவது:-

விருதுநகரில் அரசு பல் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை கேட்டதும் மாணவர்கள் மகிழ்ந்து இருப்பார்கள். அந்த பகுதி மக்களும் மகிழ்ந்து இருப்பார்கள்.

ஆனால் இது மக்களை ஏமாற்றும் வேலை. இல்லாத ஊருக்கு வழி காட்டுவது போல் பொய்யான வாக்குறுதியை வழங்கி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

உண்மை நிலையை தெரிந்துதான் முதல்வர் இப்படி அறிவித்தாரா? இல்லை போகிற போக்கில் எதையாவது செல்வோம் என்று சொன்னாரா? என்பது தெரியவில்லை.

தமிழகத்தில் அரசு பல் மருத்துவ கல்லூரி ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. ஆனால் தனியார் கல்லூரிகள் 28 உள்ளது. நாடு முழுவதும் பல் மருத்துவ கல்லூரிகள் அதிகம் இருப்பதாலும், வேலை வாய்ப்பு இல்லாததாலும் புதிதாக பல் மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டாம் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அகில இந்திய பல் மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தமிழக அரசு எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் பல் மருத்துவ கல்லூரியை தொடங்க முடியும்? அங்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு என்ன உத்தரவாதம்?

50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் அரசு சார்பில் ஒரே ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரிதான் தொடங்கப்பட்டுள்ளது.ஆனால் 28 தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி இருக்கிறார்கள். இதுதான் அவர்கள் தமிழகத்தை வளர்த்த லட்சணம் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசு மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரே வருமான வரித்துறை சோதனைக்கு ஆளாகி இருக்கிறார். இதுதான் மருத்துவ துறையின் இன்றைய நிலை.

இவ்வாறு அவர் கூறினார்.