புதுடெல்லி:
டெல்லியை அடுத்து உள்ள நொய்டாவில் நைஜீரிய நாட்டு மாணவர்கள் மீது கடந்த வாரம் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு மர்ம கும்பல் நைஜிரியர்களின் கார் மீது தாக்குதல் நடத்துவது போலவும், நைஜிரியன் கடைகள் மீது 10 -க்கும் மேற்பட்டோர் தாக்குதலில் ஈடுபட்டது போன்ற வீடியோ வெளியிடப்பட்டது. இந்த சம்பவம் நைஜிரிய ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். உள்ளூர் கும்பலால் நடத்தப்பட இந்த தாக்குதல் குறித்து ஆப்பிரிக்க மாணவர்கள் தரப்பில் சுஷ்மாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்சனையில், உடனடி நடவடிக்கையை எடுத்து உள்ளோம் என சுஷ்மா சுவராஜ் பதில் அளித்து இருந்தார்.
இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளின் மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசு உரிய கண்டனம் தெரிவிக்கவில்லை என தலைநகர் புதுடெல்லியில் உள்ள ஆப்பிரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்களில் இருந்து ஆப்பிரிக்கர்களை பாதுகாக்க இந்திய அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று ஆப்பிரிக்க நாடுகளின் தூதரக அதிகாரிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை கோர உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கிரேட்டர் நொய்டா பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க மாணவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் முக்கிய பல்கலைக் கழகங்கள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.