Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

ஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஐதராபாத்

 ஐதராபாத்:

ஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் தொடரின் 10-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. ஐதராபாத் நகரில் நடைபெற்ற தொடக்கவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இதனையடுத்து முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் வாட்சன் பந்து வீச முடிவு செய்தார்.

இதனையடுத்து, ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் மற்றும் ஷிகார் தவான் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அதிரடியாக விளையாட தொடங்கிய வார்னர் 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஷிகார் தவானுடன் ஹென்ரிகியூஸ் இணைந்து இருவரும் சீராக ரன்களை சேர்ந்தனர். ஷிகார் அதிரடியாக பவுண்டரிகளை விளாசினார். இருப்பினும் 40(31) ரன்கள் எடுத்திருந்த போது தவான் கேட்சாகி அவுட்டானார்.

பின்னர் களமிறங்கிய யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். 27 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹென்ரிகியூஸ் 52(37) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 207 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடினமான இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 21 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மந்தீப் சிங் மற்றும் ஹெட் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்த போதிலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பெங்களூர் அணியின் கேப்டன் வாட்சன் 22 ரன்களில் நெஹ்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியதால் அந்த அணி 19.4 ஓவர்களில் 172 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. ஐதராபாத் அணியின் நெஹ்ரா, புவனேஷ்வர் குமார், ராஷித் கான் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள ஐதராபாத் அணி இரண்டு புள்ளிகளை பெற்று வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது.

Exit mobile version