பிரான்ஸ் அதிபர் பிரான் கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலது சாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான், மற்கீம் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் பிரான் கோயிஸ் ஹோலண்டே 2-வது தடவையாக போட்டியிடவில்லை.
இந்த நிலையில் நேற்று ஓட்டுபதிவுக்காக பிரான்சில் முக்கிய இடங்களில் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டன. மேலும் பிரெஞ்ச் காலனி நாடுகளிலும், வெளி நாடுகளில் உள்ள பிரான்ஸ் தூதரகங்களிலும் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்குச் சாவடிகளில் ஏராளமான மக்கள் நீண்ட ‘கியூ’ வரிசையில் நின்று தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். பிரான்ஸ் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 47 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள்.
பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் 5 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவு பெற்றது. 50 ஆயிரம் போலீசார் மற்றும் 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளதாக பிரான்ஸ் நாளேடுகள் தெரிவித்துள்ளன.
இந்த தேர்தலில் யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் வருகிற மே 7-ந் தேதி 2-வது கட்டமாக வாக்குபதிவு நடைபெறும். அதில் ஏற்கனவே நடந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற 2 பேர் மட்டும் போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள்.