சட்டவிரோத பணபரிவர்த்தனையின் தொடர்பாக முதல்-மந்திரி வீரபத்ர சிங்கின் ரூ. 27 கோடி மதிப்பிலான சொத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
புதுடெல்லி:
இமாச்சலபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.அங்கு முதல்-மந்திரியாக வீரபத்ரசிங் உள்ளார்.
வீரபத்ரசிங் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய மந்திரியாக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி முதல்- மந்திரி வீரபத்ரசிங், அவரது மனைவி, மகன் உள்பட 9 பேர் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது.
சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி வீரபத்ரசிங் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு கடந்த சில தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது. அதோடு இமாச்சலபிரதேச ஐகோர்ட்டு விதித்த இடைக் கால தடைகளையும் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ரத்து செய்தார்.
டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்த சில மணி நேரங்களிலேயே வீரபத்ரசிங், மனைவி பிரதீபாசிங் உள்பட 9 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையில் வீரபத்ரசிங் உள்ளிட்டோர் மீது அமலாக்க துறையும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து இருந்தது. சட்ட விரோத பணபரிவர்த்தனையின் கீழ் இந்த வழக்கு பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் வீரபத்ர சிங்கின் ரூ. 27 கோடி மதிப்பிலான சொத்தை அமலாக்கத்துறை இன்று முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
தெற்கு டெல்லி, மெகருலி பகுதியில் அவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான பண்ணை வீடு உள்ளது. இதன் தற்போதைய மார்க்கெட் விலை ரூ. 27 கோடியாகும்.
இந்த பண்ணை வீட்டை தான் அமலாக்கப்பிரிவு சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கின் கீழ் முடக்கியுள்ளது.
முதல்-மந்திரி ஒருவரது சொத்துமுடக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது