World

கொளுத்தும் கோடை வெயில் எதிரொலி: விலங்குகள் பூங்காவுக்கு ஏர் கூலர்கள்

 போபால்:

தற்போது வட மாநிலங்களில் கோடை வெயிலையும் மிஞ்சும் வகையில் வெயில் அடித்து வருகிறது. வரும் நாட்களில் வெயில் அளவு அதிகரிக்கும் என்று வானிலை இலாகா கூறியுள்ளது.

வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக நாட்டின் வட மாநிலங்களில் அனல் காற்று வீசும் என்றும், குறிப்பாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மராட்டியம், தெற்கு உத்தர பிரதேசம் பகுதிகளில் அனல் காற்று அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1-ந்தேதி முதல் வெயில் அளவு குறைந்த பட்சம் 100 டிகிரி பாரன்ஹீட் ஆக இருக்கும். எனவே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும் என்று வானிலை இலாகா அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், கொளுத்தும் வெயில் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விலங்குகள் பூங்காவில் ஏர் கூலர் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள வான் விஹார் தேசிய பூங்காவில் ஏர் கூலரை பூங்கா நிர்வாகம் அமைத்துள்ளது. வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனைத் தாங்க முடியாமல் விலங்குகள் தவித்து வருகின்றன. இதனால் ஏர் கூலர்களை மாட்டி விலங்குகளின் வெப்பத்தைத் தணிக்கும் முயற்சியில் பூங்கா நிர்வாகம் இறங்கியுள்ளது.