political

ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் நான் இல்லை: அத்வானி

புதுடெல்லி:

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை இறுதியில் நிறைவடைகிறது. எனவே, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் பா.ஜ.க. முனைப்பு காட்டி வருகிறது. இதையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்களையும் பிரதமர் மோடி விரைவில் சந்திக்க உள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.

இந்த நிலையில், ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அத்வானி, இந்த தகவலை தெரிவித்து தன்னைப் பற்றிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தும் கூறியிருந்த நிலையில் அத்வானியும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமிதாப் பச்சனை வேட்பாளராக நிறுத்தலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால், பனாமா பேப்பர்ஸ் முறைகேட்டில் அவர் பெயர் இருந்ததால், ஜனாதிபதி பதவிக்கான போட்டி சாத்தியம் இல்லாமல் போனது. இதேபோல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பெயரும் அடிபட்டது.