political

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உருவப்பொம்மையை எரித்து போராட்டம்: பா.ஜனதாவினர் 103 பேர் மீது வழக்கு

நாகர்கோவில்:

இனயம் சரக்கு பெட்டக துறைமுக எதிர்ப்பு இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு பா.ஜனதாவினர் கண்டனம் தெரிவித்து நேற்று குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. உருவப்பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை அருகே நடந்த போராட்டத்துக்கு பா.ஜனதா நகரத் தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் நகரசபை தலைவர் மீனாதேவ், இந்து கோவில் கூட்டமைப்புத் தலைவர் ராஜா, நகரச் செயலாளர் அஜித், கோட்டச் செயலாளர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர்கள் பிரின்ஸ் எம்.எல்.ஏ.வின் உருவப் பொம்மையை எரித்து கோ‌ஷம் எழுப்பினர். போலீசார் விரைந்து வந்து உருவப்பொம்மையை கைப்பற்றி பா.ஜனதாவினரை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

இதுபற்றி வடசேரி மேற்கு கிராம நிர்வாக அதிகாரி நாகேஷ்வர காந்த் கொடுத்த புகாரின்பேரில், ராஜன், மீனாதேவ் உள்பட 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திக்கணங்கோடு சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பிரின்சின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. இது குறித்து தக்கலை இன்ஸ்பெக்டர் சிவசங்கரி, பா.ஜனதாவினர் மீது வழக்குப்பதிவு செய்தார். பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர் தங்கப்பன், துணைத்தலைவர் ரமேஷ், நாராயணகுமார் உள்பட கண்டால் தெரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவட்டார் அருகே ஆற்றூர் புளியமூடு சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணசிங் ராஜா, ராஜேஷ், விஜிகுமார், ராஜு குமார் உள்பட 30 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் பிரின்சின் உருவப் பொம்மையையும் எரித்தனர். இது குறித்து திருவட்டார் போலீசார் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மார்த்தாண்டம், வெட் டுமணி சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குழித்துறை நகரச்செயலாளர் பகத்சிங், சஞ்சீவ், விஜய பிரசாத், ராஜசேகர், ரத்தின மணி உள்பட 35 பேர் கலந்து கொண் டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் பிரின்ஸ் எம்.எல்.ஏ.வின் புகைப்படத்தை எரித்தனர். இதையடுத்து 35 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தோவாளையில் ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்த்தாண்டம் சாங்கை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் பிரின்சின் உருவப் பொம்மையை எரிக்க முயன் றனர். அதை போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், பா.ஜனதாவிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற் பட்டது. போலீசார் உருவ பொம்மை பறித்து அப்புறப்படுத்தினர்.