political

‘தமிழகத்தில் இடைத்தேர்தல் அல்ல; பொதுத்தேர்தலே வரும்!’ – அமித் ஷா-வின் அடுத்த ஆபரேஷன்

நுங்கம்பாக்கம் ஆயக்கர் பவனில், வருமான வரித்துறை அதிகாரிகளின் கேள்விகளை எதிர்கொண்டுவருகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ‘கடந்த 100 நாட்களாக நடந்து வந்த வருமான வரித்துறை ஆய்வுகளின் அடிப்படையில் விஜயபாஸ்கர் வளைக்கப்பட்டிருக்கிறார். ஜுன் மாதம் வரையில் அமைச்சர்களுக்கு நிம்மதியான உறக்கம் வரப் போவதில்லை’ என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டை அடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்து அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். ‘நான் நிரபராதி. என் மீது எந்தக் குற்றமும் இல்லை’ என அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகையாளர்கள் முன்பு சத்தம் போட்டுப் பேசினாலும், வருமான வரித்துறையின் புலானய்வுப் பிரிவு அதிகாரிகளின் விசாரணை வேறு கோணத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இதுகுறித்து தமிழக பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வந்த புகார்களின் அடிப்படையில், தமிழக அரசின் மணல் ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி, சீனிவாசலு, தங்கம் வாங்கி விற்கும் தரகர் பிரேம்குமார் உள்ளிட்டவர்களின் வீடு, அலுவலகங்களைக் குடைய ஆரம்பித்தது வருமான வரித்துறை. இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் சிபிஐ-யும் களத்தில் இறங்கின. அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், அவரது மகன் ஆகியோரையும் அதிகாரிகள் விட்டுவைக்கவில்லை. ‘முதல்வர் ஜெயலலிதா இல்லாததால், ஆளும்கட்சியை வழிக்குக் கொண்டுவருவதற்காக, இதுபோன்ற ரெய்டுகள் நடத்தப்படுவதாக’வும் சிலர் பேசிவந்தனர். ஆனால், இதைப் பற்றியெல்லாம் ஆட்சியில் இருந்தவர்கள் பகிரங்கமாக எதிர்த்துப் பேசவில்லை. உதய் மின்திட்டம் உள்பட மத்திய அரசின் பல திட்டங்களில் மாநில அரசும் இணைந்தது. ‘இனி நம் பக்கம் வர மாட்டார்கள்’ என்ற தைரியத்தில் அமைச்சர்கள் வெளிப்படையாகவே ஊழல் நடவடிக்கைகளில் இறங்கினர்.

உத்தரப்பிரதேச தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் மீது கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. ‘தமிழ்நாடு நமக்கு மிக முக்கியமான மாநிலம்’ என ஈஷா யோக மைய விழாவிலும் பா.ஜ.க நிர்வாகிகளிடம் கோடிட்டுக்காட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த நேரத்தில் ஆர்.கே.நகருக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு மிக முக்கியக் காரணமே, டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுதான். ‘தேர்தல் வெற்றிக்காக எவ்வளவு பணத்தையும் இறைப்பார்கள்’ என்பதை அறிந்து, கூடுதல் கவனத்தைத் திருப்பியது வருமான வரித்துறை. தொகுதி நிலவரம் குறித்து மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கும் அறிக்கைகளை அனுப்பினர். இவை அனைத்தும் அமித் ஷாவின் அறிவுரையின்படியே நடந்தன. கார்டனுக்கு நெருக்கமான அமைச்சர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்துவதுதான் இந்த ஆபரேஷனின் மிக முக்கிய நோக்கம்” என விவரித்தவர், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள், தொகுதி மக்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருள்கள், வாக்குறுதிகள் என அனைத்து விவகாரங்களையும் தனித்தனியாக சேகரித்தனர்.

சசிகலா-தினகரன்

பண விநியோகம் குறித்து, ஆளும்கட்சி தரப்பில் இருந்தே சோர்ஸ்களை உருவாக்கியிருந்தனர். ரெய்டுக்கான நேரத்தைக் கணித்துக் கொடுத்த வரையில், சோர்ஸ்களின் பங்கு மிக முக்கியமானது. கார்டனின் மிக முக்கிய பரிவர்த்தனைகளில் விஜயபாஸ்கரின் முக்கியத்துவம் குறித்து, ஏராளமான தகவல்கள் கிடைத்தன. கார்டனுக்கு மிக நெருக்கமான வளையத்தில்தான் தற்போது ஆட்சியில் கோலோச்சுகின்ற மாண்புமிகு இருக்கிறார். நீட் தேர்வு, மைல் கற்களில் இந்தி எழுத்துக்கள் போன்ற விவகாரங்களில் மத்திய அரசைப் பகைத்துக் கொள்ளாமல் ஆட்சியை நடத்தி வருகிறார். மீடியாக்களிடமும் நிதானமாகவே பேசிவருகிறார். ‘மத்திய அரசைப் பகைத்துக் கொண்டால், சேகர் ரெட்டி ஆயுதம் நம் மீது திரும்பும்’ என அவர் உறுதியாக நம்புவதுதான் அமைதிக்குக் காரணம். எனவேதான், விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து, எந்தக் கருத்தையும் கூறாமல் இருக்கிறார். தினகரனுக்கும் ஆட்சியில் உள்ள அமைச்சர்களுக்கும் இடையில் இடைவெளி உருவாக்கும் வேலைகளில் தீவிரமாக நடந்து வருகின்றன. தினகரனுக்கு ஆதரவான ஆளும்கட்சி புள்ளிகள் மீது வரும் ஜூன் மாதம் வரையில் ரெய்டு நடவடிக்கைகள் தொடர்ந்து அரங்கேற இருக்கின்றன. அனைத்தையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரும் மனநிலையில் அமித் ஷா இல்லை” என்றார் விரிவாக.

“இன்னும் இரண்டு மாதத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. ‘இந்தத் தேர்தலில், தமிழகத்தின் ஆதரவு தேவை’ என்ற மனநிலையில் மத்திய அரசு இல்லை. ‘வாக்குப் போடுங்கள் என இவர்களிடம் கேட்கவேண்டிய அவசியமே இல்லை. அவர்களாகவே ஓட்டுப் போடுவார்கள். இது வலுவிழந்த அரசு’ என்பதை அறிந்து வைத்திருக்கிறார் அமித் ஷா. எனவேதான், தினகரனுக்கு விசுவாசம் காட்டுகின்றவர்களை, ரெய்டின்மூலம் அலறவைக்கிறார். ஆர்.கே.நகருக்கு மீண்டும் இடைத்தேர்தலை அறிவிக்காமல், பொதுத் தேர்தலைக் கொண்டுவரும் முடிவில் இருக்கிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் கோலோச்சிய அமைச்சர்கள் ஒவ்வொருவரும், விவரிக்க முடியாத அளவுக்கு சொத்துக்களை குவித்துவைத்திருக்கிறார்கள். இதைக் காப்பாற்றுவது குறித்துத்தான் அவர்கள் கவலைப்படுகிறார்களே தவிர, ஆட்சி அதிகாரம், இரட்டை இலையைக் காப்பாற்றுவதுகுறித்த சிந்தனையே அவர்களுக்கு இல்லை. ‘தினகரனிடம் நெருங்கி இருக்காமல் தள்ளியே இருப்போம். நீங்களும் அமைதியாக இருங்கள்’ என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத் தூபம் போடும் வேலைகளையும் தொடங்கியிருக்கிறார்கள்” என்கிறார் அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகி ஒருவர்.

‘வருமான வரித்துறையின் பார்வை யாரை நோக்கி நீளும்?’ என்ற அச்சம் அமைச்சர்கள் மத்தியில் வலம் வந்தாலும், ஆபரேஷன் தமிழ்நாட்டுக்கான அடுத்தகட்ட அசைன்மென்ட்டுகளில் தீவிரமாக இருக்கிறது பா.ஜ.க தலைமை.