political

கார்கள் பறந்தன – ஆட்கள் வெளியேறினர்: ஆர்.கே.நகர் மக்கள் நிம்மதி

சென்னை:

ஆர்.கே.நகர் வாசிகள் அடிக்கடி தேர்தலை சந்தித்து பழக்கப்பட்டாலும் இந்த இடைத்தேர்தல் கடந்த தேர்தல்களை விட பரபரப்பு மிகுந்ததாக அமைந்தது.

சொந்த சகோதரர்கள் எதிரும், புதிருமாக நின்று மோதிக்கொள்வது போல் அ.தி.மு.க.வினரே இரு அணிகளாக களத்தில் இறங்கி மோதலுக்கு தயாரானார்கள்.

இதனால் தேர்தல் களம் மிகுந்த பரபரப்புக்குள்ளாகி விட்டது. ஒவ்வொரு கட்சிக்கும் இந்த தேர்தல் களம் ஒரு சோதனைக் களமாகவே அமைந்தது.

டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றால்தான் சசிகலா அணிதான் உண்மையான அ.தி.மு.க. அணி என்று நிரூபிக்க முடியும்.

ஓ.பி.எஸ். அணி வெற்றி பெற்றால்தான் அ.தி.மு.க. எங்கள் பக்கமே என்று ஓ.பி.எஸ். மார்தட்ட முடியும். அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயம்.

இவ்வளவு இழுபறிக்குள்ளும் வெற்றி பெறாவிட்டால் தி.மு.க.வின் மவுசு குறைந்து விடும் என்ற இக்கட்டான நிலை தி.மு.க.வுக்கு!

இப்படி ஒவ்வொரு கட்சிகளும் அடித்துக்கொள்ளும் போது நம் பலத்தை காட்டிவிட வேண்டும் என்ற துடிப்பு பா.ஜனதாவுக்கு!

இதனால் தேர்தல் பணிக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சியினர் வரவழைக்கப்பட்டனர். சின்ன சின்ன தெருக்கள் – ஆட்டோக்கள் மட்டுமே செல்லும் தெருக்கள் – நெரிசல் மிகுந்த குடிசை பகுதிகள் இதுதான் ஆர்.கே.நகரின் உட்புற தோற்றம்.

ஒவ்வொரு தெருவிலும் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள், கட்சி பிரமுகர்கள் என்று எப்போதும் திருவிழா கூட்டம்!

ஓரிரு கார்கள் மட்டுமே வந்து செல்லும் தெருக்களில் பத்துக்கும் மேற்பட்ட சொகுசு கார்கள்!

தெருக்களிலேயே நாற்காலிகள் போட்டு அமர்ந்திருந்த கட்சிக்காரர்கள்! 24 மணி நேரமும் பரபரப்பாக இருந்ததால் நெரிசலில் சிக்கி ஆர்.கே.நகர் வாசிகள் சீரழிந்து போனார்கள்.

எப்போது தேர்தல் முடியும்? எப்போது சகஜ நிலை வரும்? என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.

தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு வெளியானதும் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தெருத்தெருவாக சுற்றி வந்த துணை ராணுவம் முதல் கட்சிக்காரர்கள் வரை அனைவரும் வெளியேறிவிட்டதால் ஆர்.கே.நகர் இன்று மாமூல் நிலைக்கு தப்பியது.

இந்த தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கும்படி ஒரு கட்சி ரூ.4 ஆயிரம், இன்னொரு கட்சி ரூ.2 ஆயிரம், மற்றொரு கட்சி ரூ.ஆயிரம் என்று ஒவ்வொரு வாக்காளருக்கு ரூ.7 ஆயிரம் கிடைத்துள்ளது.

இந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர்களும் பணத்தை பார்த்ததும் தடுமாறி விட்டார்கள். யாருக்கு ஓட்டுப் போடுவது? வாசல் தேடி வந்து பணத்தை தந்து விட்டார்களே! யாருக்கு போடுவது என்று குழம்பிப் போய் இருந்தார்கள். இப்போது குழப்பம் தெளிந்து அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்.

பலர், எங்களிடம் பணத்தை திணித்து விட்டார்கள். அதனால் யாருக்கு ஓட்டுப் போடுவது என்ற குழப்பத்தில் இருந்தோம். இனி எங்களுக்கு பிரச்சினை இல்லை என்று சந்தோசப்பட்டார்கள்.

திருமண மண்டபங்கள், வீடுகள் வாடகைக்கு எடுத்து முகாமிட்டு இருந்தார்கள். அவர்கள் கூத்தும் கும்மாளமுமாக அடித்த லூட்டிக்கு அளவே இல்லை. இன்று எல்லோரும் வெளியேறிவிட்டதால் காலியாகிவிட்ட திருவிழாக்கடைகள் போல் அந்த இடங்கள் காட்சி அளிக்கிறது.

800 துணை ராணுவம், 30 பறக்கும் படைகள், 25 நுண்ணறிவு குழுக்கள், 21 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அனைத்தும் 24 மணி நேரமும் களத்தில் சுற்றி சுற்றி வந்தன.

அவர்களை ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் உள்ள 7 அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வந்தார்கள். இத்தனை பேரின் உழைப்பும் வீணாகி விட்டது.

பிரச்சினை முடிந்து விடும் என்று நினைத்தோம். இனியும் இதே போல் சீரழியத்தானே வேண்டும் என்று இவர்கள் மட்டும் ஆதங்கப்படுகிறார்கள்.

இத்தனை கட்டுக்காவலையும் மீறி நோட்டுகளை வீசிய கட்சிக்காரர்கள்தான் கில்லாடிகள். இனி தேர்தல் அறிவித்ததும் மீண்டும் வருவோம் என்று மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பினார்கள்.

வேகாத வெயிலில் வெந்து தினம் நூறுக்கும், இருநூறுக்கும் கஷ்டப்படும் பாமர மக்கள்தான், பரவாயில்லை. இதுவும் ஒரு வகையில் எங்களுக்கு நல்லதுதான். ‘இன்னொரு ரவுண்டு பணமும் கிடைக்கும்! பிரசார வேலைகளும் கிடைக்கும் சந்தோசமாக போய் வாருங்கள்’ என்று வழி அனுப்பினார்கள்.

About the author

Julier