பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியை பற்றி தவறாக விமர்சித்துவரும் தனது கட்சிக்காரர்களுக்கு நவாஸ் ஷெரிப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ரஹீல் ஷெரிப், 41 அரபு நாடுகளின் கூட்டமைப்பாக சவுதி அரேபியா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தீவிரவாதத்துக்கு எதிரான சிறப்பு படையின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தின் பின்னணியில் பாகிஸ்தான் பிரதமர் இருந்ததாகவும், இதற்கு முன்னர் இதே பதவியில் இருந்த மற்ற ராணுவ தளபதிகளைப்போல் பணியாற்றிய ரஹீல் ஷெரிப்புக்கு நவாஸ் ஷெரிப் நிறைய சலுகைகள் அளிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நவாஸ் ஷெரிப் சார்ந்திருக்கும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் உள்ளேயும் இந்த விவகாரத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நமது நாட்டின் ராணுவ தளபதியாக பணியாற்றியவர் மற்ற நாடுகளின் கூட்டுப் படைக்கு தலைமை தாங்குவதா? என்றும், ரஹீல் ஷெரிப்புக்கு நவாஸ் ஷெரிப் அரசு நிலம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாகவும் சிந்து மாகாண கவர்னர் முஹம்மது ஜுபைர் மற்றும் அக்கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் பல்வேறு விதமாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் முன்னாள் தளபதியாக ரஹீல் ஷெரிப் ஆற்றியுள்ள சேவை மிகவும் பெருமதிப்பு வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், அவரது சேவைக்கு ஏற்ப அளிக்கப்படும் மரியாதை தொடர்பாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியினர் இனி எதுவும் விமர்சிக்க கூடாது என்று எச்சரித்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.