political

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அடுத்து… கலக்கத்தில் 7 அமைச்சர்கள்!

அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த  வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு, கலக்கத்தில் ஏழு அமைச்சர்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த ஏழு அமைச்சர்களும் ஒரே இடத்தில் கூடி, ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது. 

அமைச்சர் விஜயபாஸ்கர், ச.ம.க தலைவர் சரத்குமார், முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரது வீடு, அலுவலகங்களில்… சில தினங்களுக்கு முன்பு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள், பணம் ஆகியவற்றை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரிடம் இன்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வருமான வரித்துறை சோதனையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பட்டியல் குறித்த விவரங்கள், அதிகாரிகளிடம் சிக்கியுள்ளன. அதன்அடிப்படையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பணம் கொடுத்த வேட்பாளர்களும் அவரது ஆதரவாளர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

இதுகுறித்து, பெயரைக் குறிப்பிட விரும்பாத  சசிகலா அணி தரப்பைச் சேர்ந்த  ஒருவர் நம்மிடம், “அமைச்சர் விஜயபாஸ்கரை குறிவைத்துதான் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த அடுத்த நாளே, ச.ம.க தலைவர் சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனைக்குப் பின்னால், ஓர் அரசியல் இருக்கிறது. குறிப்பாக, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் மத்திய அரசின் நெருக்கடி அதிகளவில் இருந்துவருகிறது. ஆனால் பா.ஜ.க-வினர் அதை மறுத்துவருகின்றனர்.
தமிழக அரசைப்  பயமுறுத்த, தொழிலதிபர் சேகர்ரெட்டி வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது, அவர் புழல் சிறையில் உள்ளார். அவர், மீடியா முன்பு வாயைத் திறந்தால் மத்திய அரசுக்குப் பாதிப்பு வரும். வாயைத் திறக்கவில்லை என்றால், தமிழக அரசுக்கு நெருக்கடி வரும். சேகர்ரெட்டி, மனம் திறந்து பேசினால், மத்திய, மாநில அரசின் மக்கள் பிரதிநிதிகளுக்கு கட்டாயம் சிக்கல் ஏற்படும். குறிப்பாக, அவருடன் நெருக்கமாக இருந்த ஒவ்வொருவர் மீதும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. நியாயமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதை வரவேற்கலாம். ஆனால், மத்திய அரசுக்கு ஜால்ரா தட்டியவர்கள் மீது வருமான வரித்துறையினர் ஏன் சோதனை நடத்தவில்லை. சேகர்ரெட்டியுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்களுக்கு ஏன் வருமான வரித்துறையினர் செல்லவில்லை.

வருமான வரித்துறையினர்
அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் சிக்கிய ஆவணங்கள், பணம் ஆகியவற்றை விளக்கம் அளிக்கத் தயாராக உள்ளோம். அது தொடர்பாக, ஆலோசனை நடத்தியுள்ளோம். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள மூத்த அமைச்சர்கள் ஏழுபேர் ஒன்றுசேர்ந்து ஆலோசனை நடத்திவருகின்றனர். இவர்கள், மூத்த அமைச்சர் ஒருவருடைய வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். வருமான வரித்துறையின் சோதனையை எப்படி எதிர்கொள்வது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து உள்ளிட்டவைகள் குறித்து விவாதித்துள்ளனர்” என்றார்.

 இந்தச் சூழ்நிலையில், வருமான வரித்துறையின் சந்தேக வளையத்திலிருக்கும் ஏழு மூத்த அமைச்சர்கள் மற்றும் அவர்களது நிழல் மனிதர்கள், கலக்கத்தில் உள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. சோதனையிலிருந்து உடனடியாக அவர்கள் தப்பிக்க, அனைத்து வகை முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சிலர், ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தால் சோதனையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும் ஆலோசனையின்போது தெரிவித்துள்ளனர். அதற்கு சிலர், அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கலைந்துசென்றுள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனை, தமிழக அமைச்சர்கள் மத்தியில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழ்நிலையில், வேட்பாளர் டி.டி.வி.தினகரனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம்.

வருமான வரித்துறையினர்
இதையடுத்து, ச.ம.க தலைவர் சரத்குமார் வீட்டில் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டதும், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தச் சோதனை, சரத்குமார் வீட்டிலும் பூகம்பத்தை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. தனித்துப் போட்டியிட முடிவுசெய்த சரத்குமார், கடைசிவரை அமைதியாகவே இருந்திருக்கலாம். டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, சோதனையில் சிக்கிவிட்டார் தலைவர் என்று சொல்கின்றனர், ச.ம.க-வின் மூத்த நிர்வாகிகள். இருப்பினும், சோதனையைத் தைரியமாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார், சரத்குமார். வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு நிதானமாகவே பதில் அளித்ததாகச் சொல்கின்றனர், உள்விவரம் தெரிந்தவர்கள்.