political

இடைத்தேர்தல்: 4 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி – கர்நாடகத்தின் 2 தொகுதிகளையும் காங். கைப்பற்றியது

துடெல்லி:

நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காலியாக இருந்த 10 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.  டெல்லியில் ரஜோரி கார்டன் சட்டசபை தொகுதி, கர்நாடகத்தில் நஞ்சன்கூடு, குண்டுலுபேட், அசாமில் தேமாஜி, மத்தியப் பிரதேசத்தில் பந்தவ் கார், அதேர், இமாச்சலப் பிரதேசத்தில் போரஞ்ச், ராஜஸ்தானில் தோல்பூர், ஜார்க்கண்ட்டில் லித்திபரா, மேற்கு வங்காளத்தில் காந்தி தக்சின் ஆகிய 10 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.

தலைநகர் டெல்லியின் ரஜோரி கார்டன் தொகுதியில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க. வேட்பாளர் மன்ஜீந்தர் சங் சிர்சா, 14652 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 40602 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி சண்டேலா 25950 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி வேட்பாளர் ஹர்ஜீத் சிங் 10243 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். டெபாசிட் தொகையையும் இழந்தார்.

இந்த தொகுதியானது ஆம்ஆத்மி வசம் இருந்தது. இங்கு எம்.எல்.ஏ.வாக இருந்த ஜர்னைல் சிங் ராஜினாமா செய்து விட்டு பஞ்சாப் தேர்தலில் போட்டியிட்டார். இப்போது நிறுத்தப்பட்ட அக்கட்சி வேட்பாளர் ஹர்ஜீத்சிங் படுதோல்வி அடைந்தது ஆளும் ஆம்ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. டெல்லி தேர்தல் வெற்றியை பா.ஜனதாவினர் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. பந்தவ்கர் தொகுதியை தக்க வைத்துக்கொண்டது. இந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சிவநாராயணன் சிங், 25476 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சாவித்ரி சிங்கை தோற்கடித்தார்.

இமாச்சலப் பிரதேசத்தின் போரஞ்ச் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் அனில் திமான் 8290 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் புரோமிளா தேவியை தோற்கடித்தார். அசாம் மாநிலம் தேமாஜி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ரனோஜ் பேகு, 9285 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பாபுல் சோனோவலை வென்றார்.

மேற்கு வங்காளத்தின் தக்சின் சட்டசபை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சந்திரிமா பட்டாச்சார்யா வெற்றி பெற்றார்.

கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடந்த 2 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது. நஞ்சன்குடாவில் காங்கிரஸ் வேட்பாளர் கேசவமூர்த்தி 21000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்ரீனிவாஸ் பரிசாத்தை தோற்கடித்தார். குண்ட்லுபேட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கீதா மகாதேவபிரசாத், 10000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க.வின் சி.எஸ்.நிரஞ்சன் குமாரை தோற்கடித்தார்.

ராஜஸ்தானின் தோல்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஷோபா ராணி தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.